கொழும்பு: அடுத்த பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வழங்கி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறிய அவர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று சுப நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரஜீவ விஜேசிங்க, முன்னாள் மாகாண அமைச்சர், சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். மத அனுஷ்டானங்களை தொடர்ந்து கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,
மீண்டும் எழுச்சி பெறும் நோக்கத்துடனே எதிர்க்கட்சி அலுவலக பணிகளை ஆரம்பித்துள்ளோம். எதிர்க் கட்சித் தலைவர்களாக பணிபுரிந்த பலரும் சம்பிரதாயமாக ஒரேவாறான பணியையே மேற்கொண்டனர். ஆனால் எனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியினூடாக புதிய அரசியல் கலாசாரம் உருவாகியுள்ளது. கடந்த எதிர்க் கட்சித்தலைவர்கள் போலன்று அதனை விடமாற்றமான பணியை முன்னெடுக்க இருக்கிறேன்.
நான் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டது. குறித்து பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதே எனது பிரதான நோக்கமாகும். எனது உடலில் சுதந்திரக் கட்சி இரத்தமே ஓடுகிறது. எனக்கு இந்த பதவி வகிக்க பூரண உரிமை இருக்கிறது. நான் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். இடதுசாரி கட்சிகளுடன் கலந்து செல்லும் கட்சியாக எமது கட்சி செயற்படும்.
அரசியல் பழிவாங்கப்பட்டவர்கள், தாக்கப்பட்டவர்கள் போன்றவர்களை நான் நேரில் சென்று சந்திதேன். மக்களினதும் தொழிற்சங்கங்களினதும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனியான இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வகித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளார்.
கட்சி இரண்டு துண்டாகும் சவாலை வென்று கட்சியை ஒன்றுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது கட்சியிலுள்ள சிலர் அவசர முடிவு எடுப்பதால் கட்சி துண்டாடுவதற்கு வாய்ப்பாக செயற்படுகின்றனர். எம்மைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் கட்சி குறித்தும் கட்சி ஆதரவாளர்கள் குறித்தும் சிந்தித்தே முடிவு எடுக்க வேண்டும். ஐ.தே.க. எம்மை சுற்றி படர்ந்து எம்மை அழிக்க முயல்கிறது. எமது கட்சியை நாம் பாதுகாக்க வேண்டும்.
கட்சித் தலைவராக இருந்து கட்சி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஜனாதிபதி இணங்கியமை கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். நாம் ஆளும் தரப்பில் இருந்து அரசியல் செய்வதற்கும் எதிர்க்கட்சியிலிருந்து அரசியல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெறும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்சிக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். கடந்த கால தவறுகளை திருத்தி முன்னேற இருக்கிறோம்.
திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் கட்சிக்குள் இருந்து கொண்டுதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கெதிராக குரல் கொடுத்தார்கள். கட்சியை உடைத்துக் கொண்டு செல்லவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி முறை மாற்றப்பட வேண்டும். ஐ.தே.க.வுக்கு தேவையானவையன்றி சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு திருத்தமே அவசியம்.
சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தி ஒரே கூட்டணியாக இணைந்து செயற்படுவதினூடாகவே வெற்றிபெற முடியும்.கடந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் எம்மீது சேறுபூசுகின்றனர். பிரபலமடைவதற்காகவே இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படுகிறது. நன்கு ஆராய்ந்தே ஊடகங்கள் செய்திகளை பிரசுரிக்க வேண்டும்.
இலஞ்ச ஊழல் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் அவை உறுதிப்படுத்தப்படும் வரை அவர் நிரபராதியே. யாராவது தவறு செய்திருந்தால் அவர்களை பாதுகாக்கவோ வேட்புமனு வழங்கவோ மாட்டோம் என்றார்.
Published by


Leave a comment