அமெரிக்காவுக்கு எதிராக அணிசேரும் நாடுகள்: என்ன செய்யப்போகிறது இந்தியா?

america usaDN

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து உலகளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. 

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாட்டின் காரணமாக அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டே கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதை நிரூபிப்பது போல், கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் ரஷ்யாவின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கையால் ரஷ்யா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரஷ்யா உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு செய்து வரும் உதவிகளை அதிகரித்துள்ளதாகவும், அங்கு ரஷ்ய படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் அமெரிக்கா அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக இழுபறி நீடித்து வந்த அணுசக்தி ஒப்பந்தமும் கையெழுத்தானது. மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ரீதியாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது சீனாவிற்கு அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்தியாவுக்கு போட்டியாக அமெரிக்காவின் முக்கிய எதிரியான ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சிறப்பு விருந்தினராக அழைத்து வர சீனா திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

அங்கு சீன மக்கள் குடியரசு உருவான 1949–ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை 2–ம் உலகப்போரில் வெற்றி பெற்ற 70–ம் ஆண்டு விழா கொண்டாட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

அதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிட புதின் அழைக்கப்பட உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை சீன பாதுகாப்பு துறை தலைவர் பு ஷென்குவா உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே போல் வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்ட காலமாகவே பகை இருந்து வருகிறது. சோனி பிக்சர்ஸ்-ன் இணைய தளத்தை முடக்கியது வட கொரியா தான் என அமெரிக்கா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது. இதை வடகொரியா கடுமையாக எதிர்த்து மறுப்பு தெரிவித்தது.

சீனாவை போல் ரஷ்யாவும், அமெரிக்காவுக்கு எதிரியான வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை, தங்கள் நாட்டில் நடைபெறும் இரண்டாம் உலக போர் ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. வரும் மே மாதம் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ள கிம் ஜோங் உன்னும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் வட கொரியா அதிபராக பொறுப்பேற்ற கிம் ஜோங் உன்இ முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யா செல்ல உள்ளார்.

சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த அணியில் ஈரான் மற்றும் கியூபா போன்ற நாடுகளும் இணையக்கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த காலங்களில் எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையான கொள்கைகளை கடைபிடித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான தனது நிலைப்பபாட்டை மாற்றிக்கொண்டு, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. இந்த நிலைப்பாடு இந்தியாவின் எதிர்காலத்துக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதா என்பதை மத்திய அரசு மீண்டும் ஒரு முறை பரிசீலித்து பார்ப்பது சரியென்றே நமக்கு தோன்றுகிறது.

அமைதியை வலியுறுத்திய காந்தி மகானின் வழியில் இந்தியா தொடர்ந்து சென்றதால் தான் இந்திய நாட்டிற்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை மேலும் உயர்த்தும் வகையில் மத்திய அரசு செயல்படவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.

Published by

Leave a comment