காத்தான்குடி: ‘காத்தான்குடி நகரசபையின் கடந்த கால நடவடிக்கைகளை முழுமையான, முறையான நிதிப்பரிசோதனைக்கும், தொழில்நுட்ப பரிசோதனைக்கும் உட்படுத்த அதன் தவிசாளர் உடன்பட்டால் மாத்திரமே ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியும். அதற்கு அவர் தயாரா என்பதனை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும்’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.
NFGGயின் காத்தான்குடி காரியாலயத்தில் கடந்த 25.01.2015 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
NFGGயின் தலைமைத்துவ சபைப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்ட இவ்வூடக சந்திப்பில் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..,
‘காத்தான்குடி நகரசபை தொடர்பான ஊழல் மோசடி விடயங்களுக்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் பதிலளிக்க வேண்டும் என நாம் கேட்டிருந்தோம். ஆனால் நகரசபை விவகாரங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லையென அவர் தெரிவித்திருக்கிறார். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த ஏராளமான பொய்களில் இதுவும் ஒன்றாகும். ஏனெனில், நகரசபை நிர்வாகமானது சயாதீனமாக இயங்குகின்ற ஒன்றல்ல என்பதும் அது ஹிஸ்புல்லாஹ்வின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது என்பதும் எல்லோரும் அறிந்த விடயமாகும்.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நகரசபைத் தவிசாளர் அவ்வாறு எதுவித ஊழல் மோசடிகளோ அதிகார துஷ்பிரயோகங்களோ எதுவும் நடைபெறவில்லலை யென்றும் அவ்வாறு ஏதுமிருப்பின் உரிய ஆணைக்குழுக்களிடம் அவற்றை சமர்ப்பித்து எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதைச் செய்வதில் பிரச்சினையில்லை. அவற்றில் சில தொடர்பில் நாம் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுக்களுக்கும் முறைப்பாடுகளைச் செய்திருந்தோம். ஆனால், அவற்றுக்கு எதுவித நடவடிக்கைகளும் துரதிஷ்டவசமாக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதுவே எமது அனுபவமாகும்.
இவ்வாறுதான் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் ஊழல்மோசடிகள் பற்றிப் பேசப்பட்டபோது அவ்வாறு எதுவும் இல்லையென்றும் முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதிகாரத்தில் இருந்து அவர் அகற்றப்பட்ட தினத்திலிருந்து நாளாந்தம் அவரது மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அது போலவே, நகரசபைத் தவிசாளர் அந்த நிர்வாகத்தில் இருந்து அகற்றப்பட்டால் அத்தனை விடயங்களையும் இலகுவாக நிரூபிக்க முடியும். அல்லது ஒரு முழுமையான நிதிப்பரிசோதனைக்கும் தொழில்நுட்பப் பரிசோதனைக்கும் காத்தான்குடி நகரசபையின் சகல நடவடிக்கைகளையும் உட்படுத்தினால் மாத்திரமே அவற்றை நிரூபிக்க முடியும்.
ஏனெனில் அங்கு நடைபெற்ற ஊழல் மோசடிகளுக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அந்த வகையிலேயே கடந்த நகரசபை ஆட்சிக்காலத்தில் இவர் உதவித் தவிசாளராக இருந்த சந்தர்ப்பத்திலும் இதுபோன்ற முழுமையான நிதிப் பரிசோதனைக்கு உடன்படுமாறு கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதியில் கோரியிருந்தோம். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.
நகரசபையில் உறுப்பினர்களாக இருந்த நாம் அங்கு நடைபெறும் திருட்டுத்தனங்களை கையும் களவுமாகப் பிடித்திருக்கிறோம். இந்த நகரசபையின் ஆரம்பக் கட்டத்தில் நடந்த சபை அமர்வொன்றில் தவிசாளர் வழங்கிய ஒரு மோசடியான கொடுப்பனவை நாம் அம்பலப்படுத்தியபோது அதனை ஏற்றுக் கொண்ட சபை அந்தக் கொடுப்பனவை இரத்து செய்தது. ஆனால் அந்த சபைத் தீர்மானத்தையும் மீறி தவிசாளர் அந்தக் கொடுப்பனவை செய்து முடித்தார். அதுபோலவே போலியான ஆவணங்களைத் தயாரித்து கொடுப்பனவுகளை மேற்கொண்ட விடயங்களையும் நாம் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறோம். அதன் பின்னராவது சபை நடவடிக்கைகளை நேர்மையாக அமைத்துக் கொள்வதற்கு அவர் முன்வரவில்லை. அதற்குப்பதிலாக அந்தத் திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்திய எம்மை சகல நிர்வாகக் குழுக்களிலிருந்தும் அகற்றினார். அதனையும் கூட திருட்டுத்தனமான தீர்மானம் ஒன்றின் மூலமே செய்தார்.
இவ்வாறு சபை நடவடிக்கைகளிலும் திருட்டு தீர்மானங்களிலும் திருட்டு கூட்டறிக்கைளிலும் திருட்டு என ஏராளமான மோசடிகள் தொடர்கின்ற நிலையில் தவிசாளர் அப்படி எதுவும் இல்லையெனக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.
எனவேதான் ஊழல் மோசடி என்றால் என்ன அதிகார துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதனை இவருக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் முதலில் ஒரு பாடமாகப் படிப்பிக்க வேண்டும் என நாம் தொடர்ந்தும் சொல்லி வருகின்றோம்.
எனவே ஊழல் மோசடிகளுக்கு எதிராக சபையில் பேசுகின்ற உறுப்பினர்களை சகல குழுக்களிலிருந்தும் அகற்றி விட்டு சபை அமர்வுகளை ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக பார்வையிடுவதனை தடுத்துவிட்டு சபை உறுப்பினர்கள் ஆவணங்களை பார்வையிடுவதற்கான அனுமதியினை மறுத்துவிட்டு சபைத் தீர்மானங்களை மீறிவிட்டு பிழையான தீர்மானங்களை திருட்டுத்தனமாக கூட்டறிக்கையில் செருகியும் விட்டு இங்கு எதுவும் நடக்கவில்லையென நகரசபை தவிசாளர் கூறுவது ஆச்சர்யமானதாக இருக்கிறது.
எனவேதான், ஒரு சுயாதீனமான, முழுமையான நிதிப்பரிசோதனைக்கும், தொழில்நுட்ப பரிசோதனைக்கும் நகரசபையின் கடந்த கால நடவடிக்கைகளை உட்படுத்தி முழுமையான விசாரணையொன்றை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் முன்வைக்கின்றோம். இதற்கு உடன்பட்டால் நகரசபையின் ஊழல் மோசடிகளை தெளிவாகவும் விரைவாகவும் நிரூபிக்க முடியும். இதற்கு உடன்படத்தயாரா..? என்ற என்ற எமது சவாலுக்கான பதிலை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.’
Published by

Leave a comment