– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
காத்தான்குடி: ‘ஊழல் மோசடிகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை உள்ளூர் பொறிமுறையொன்றின் மூலம் மேற்கொள்வதற்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தயங்குவது ஏன்..?’ என NFGG கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று (25.01.2015) காத்தான்குடியில் அமைந்துள்ள NFGGயின் பிராந்தியக் காரியாலயத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர்களான MBM.பிர்தௌஸ், பொறியியலாளர் MM.பழ்லுல் ஹக், மற்றும் ALM.சபீல் ஆகியோரும் கலந்து கொண் இடவ்வூடக சந்திப்பில் பல்வேறு வினாக்களுக்கும் NFGGயின் பிரதிநிதிகள்
பதிலளித்தனர்.தம்மீதான ஊழல் மோசடிகள் குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் அவற்றை கொழும்பிலுள்ள ஆணைக்குழுவிடம் ஒருசில தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒருசில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..
‘முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு உள்ளூர் விசாரணை பொறிமுறை ஒன்றுக்கு அவர் உடன்பட வேண்டும் என மிகத் தெளிவாக நாம் தெரிவித்திருந்தோம். அதற்கான நியாயத்தையும் நாம் தெளிவாகச் சொல்லியிருந்தோம்.
அவரது நீண்ட கால அரசியல் வரலாற்றில் நடைபெற்றதாக சொல்லப்படும் ஏராளமான ஊழல் மோசடிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் சில தொடர்பில் நாம் ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கும் ஆணைக்குழுக்களுக்கும் முறைப்பாடுகளைச்
செய்திருக்கின்றோம்.உதாரணமாக, அவரது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கொழும்பிலிருக்கும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கடந்த 2102ஆம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி சமர்ப்பித்திருந்தோம். ஆனால் அவற்றுக்கு எதுவித நடவடிக்கைகளும் துரதிஷ்டவசமாக இது வரை மேற்கொள்ளப்படவில்லை. நாட்டில் இருக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுக்களும் ஏனைய அதிகாரக் கட்டமைப்புகளும், அரசியல்வாதிகள் தொடர்பான ஊழல்மோசடி குற்றச்சாட்டுகள் எவற்றுக்கும்
எந்தவொரு நடவடிக்கைகளையும் இது வரை மேற்கொள்ளவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்த நிலைமை புதிய அரசாங்கத்தின் கீழ் மாற்றப்படும் என நாம் நம்பினாலும் கூட கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற ஏராளமான ஊழல் மோசடிகளை விசாரணை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு மிக வீண்டகாலம் எடுக்கலாம்.இது போன்ற தாமதங்களையும் நிலவரங்களையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் தப்பித்து விடக்கூடாது என்பதனாலேயே நாம் உள்ளூர் விசாரணைப் பொறிமுறை என்ற விடயத்தை உறுதியாக முன்வைக்கின்றோம்.
ஆனால் கடந்த 20ம் திகதி அன்று ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், எமது இந்த உள்ளூர் விசாரணைப் பொறிமுறை அவசியம் என்ற கோரிக்கை பற்றி எதுவும் சொல்லாமல் மிகத் தந்திரமாகத் தவிர்ந்து கொண்டு, மீண்டும் பழைய பாணியிலேயே தாம் தொடர்பான
குற்றச்சாட்டுக்களை கொழும்பில் இருக்கும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தார்.நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் அறிவுபூர்வமான ஆதாரபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையுமே எப்போதும் முன்வைக்கின்றோம். வெறும் அனுமானங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களைச் சொல்வதில்லை. அதேபோன்று ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளை விரைவில் பெற்றுக் கொள்ளக்கூடிய யோசனைகளையே நாம் எப்போதும் முன்வைக்கிறோம். ஆனால் நாம்
சொல்லுகின்ற விடயங்களை ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் முறையாகக் கிரகிப்பதில்லை என்பதே இங்குள்ள அடிப்படை பிரச்சினையாகும்.அந்த வகையில்தான் இந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை தெளிவாகவும், உடனடியாகவும் அவர் நிரூபிக்கும் பொருட்டு உள்ளூர் விசாரணைப் பொறிமுறையை நாம் வலியுறுத்துகின்றோம்.
ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் நடவடிக்கைகள் காத்தான்குடிப் பிரதேசத்தை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றன. அவர் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் எமது காத்தான்குடி பிரதேச
மக்களின் நலன்களோடு சம்மந்தப்பட்டவையே. மேலும் கடந்த காலங்களில் தமது அரசியல் தேவைகளுக்காக உள்ளூர் கட்டமைப்புகளை அதிகம் பயன்படுத்துகின்ற ஒருவராக ஹிஸ்புல்லாஹ் எப்போதும் இருந்திருக்கின்றார்.இந்நிலையில் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை உள்ளூர் பிரதேச மக்களின் முன்பாக தெளிவுபடுத்துவதே மிகப் பொருத்தமானதாகும். இந்நிலையில் உள்ளூர் விசாரணை பொறிமுறை ஒன்றுக்கு உடன்பட ஏன் ஹிஸ்புல்லாஹ் தயங்குகின்றார் என நாம் கேட்க விரும்புகின்றோம்.
அந்த வகையில் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையானது துறைசார் வல்லுனர்கள் மற்றும் உள்ளூர் சமூக மற்றும் மார்க்க நிறுவன பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும் மார்க்க வழிமுறைகளின் படியும் சாட்சியங்களையும் ஆதாரங்களையம் நெறிப்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியும். இதனையே உள்ளூர்ப் பொறிமுறையாக நாம் முன் மொழிகிறோம். இதற்கு, முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உடன்படுகிறாரா இல்லையா என இன்னும் ஒருவார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
அதேநேரம் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக் கொண்டதன் படி அவர் தொடர்பான முறைப்பாடுகளை கொழும்பில் இருக்கும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருப்பதன் காரணமாக அவை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்.”
Published by


Leave a comment