கல்முனை: கல்முனை மாநகரம் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமானதும் இன்றியமையாததுமான நகரமாகும். கல்முனை என்பது தனியான ஒரு ஊர் அல்ல கல்முனைக்குடி, சாய்ந்தமருது மற்றும் மருதமுனை எனும் முப்பெரும் ஊர்களும் இன்னும் நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கல்முனைத்தமிழ் பிரதேசம், இஸ்லாமாபாத் போன்ற சிறு கிராமங்களும் உள்ளடங்கிய பெரிய நிலப்பரப்பாகும்.
இப்பிரதேச வாழ் மக்கள் பிரிவினைகள் மறந்து தங்களது ஊரை சகலரும் இன்முகத்துடன் கல்முனை என்று ஒருமித்த குரலில் கூறுவார்கள். இன் நகரை கிழக்கின் முகவேத்திலை என்று பல்வேறுபட்ட தரப்பினாலும் விழிக்கப்படுவதுண்டு. இலங்கையை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் பெருன்பான்மையாக வாழக்கூடியதும் முஸ்லிம்களினதும் ஏனைய இனங்களினதும் சமூகங்களினதும் கூட்டு ஒற்றுமையை பறைசாற்றக்கூடிய மாநகரமாக காணப்படுகின்றது வரலாற்று சிறப்பாகும். இன் நகரத்தில் இருந்தே பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் கல்விமான்கள், மார்க்க அறிஞ்சர்கள், சமூகசேவகர்கள், புத்திஜீவிகள் இன்னும் பெயர் சொல்லக்கூடிய வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஏனைய பிரதானிகள் இலங்கை நாட்டுக்கும் வெளிநாட்டிலும் கால்பதித்து எமது கல்முனை மாநகருக்கு பெருமை ஏற்ப்படுத்தினர். இதேபோல இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்பேர்ப்பட்ட கல்முனை மாநகரத்தின் இன்றைய நிலை...?
ஐய்யகோ அந்தோ பரிதாபம்!
கேடுகெட்ட அரசியல் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளினால் எமது நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் சீரழிந்து கொண்டிருப்பது பார்க்கவே மனவேதனையை உண்டுபண்ணுகின்றது.
மாநகரசபை என்பது மக்களுக்காக அல்ல அதைவைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்குதான் என்பது இன்றைய காலங்களில் மிகவும் தெள்ளத் தெளிவாகத் புலப்படுகின்றது. பட்டின சபையாக, பிரதேச சபையாக நகரசபையாக இருந்த கால்களில் நடந்த சேவைகளில் மூன்றில் ஒரு பகுதி சேவைகள் கூட தற்போதைய மாநகர சபையினால் நடைபெறுவதில்லை என்பது மிகவும் மனவேதையான விடயமாகும்.
அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்களின் காலத்தில் பட்டின சபையாக இருந்து பிரதேச சபையாக தரமுயர்த்தப்பட்ட கல்முனை நகரம் பின்னர் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களினதும் அவரது மறைவுக்கு பின்னர் அவரது மனைவியான முன்னால் அமைச்சர் பேரியல் இஸ்மாயில் அஸ்ரப் அவர்களினதும் பெருமுயர்ச்சியாலும் நகர சபையாகவும் மாநகர சபையாகவும் தரமுயர்த்தப்பட்டது யாவரும் நன்கறிந்ததே. இவ்வாறு தரமுயர்த்தப்பட்டத்தின் பின்னணியில் அரசியல் மாத்திரமே தங்கி இருந்ததே தவிர நகரசபை, மாநகர சபைக்கு தேவையான பௌதீக வளமோ அல்லது சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளோ கல்முனை நகரில் இருக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
அது அப்படியே இருக்க, இன்றைய சுனாமிக்கு பின்னரான காலப்பகுதில் எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்ற நிலையிலும் பல வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் எமது நகருக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படுத்தப்படவில்லை என்பது பிரதேச வாழ் மக்களாகிய எமது துர்ப்பாக்கிய நிலை என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
அரசியல் பதவிகள் ஏனைய சுயலாபங்களுக்காக மக்களையும் ஊரையும் பிரிவினைவாதத்தின் மூலம் பிரித்தெடுத்து சூழ்சிகளை மேற்கொண்டு பதவிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அபிவிருத்தி என்பது ஏட்டுச்சுரக்காய் என்ற நிலையில் செயற்ப்படும் அரசியல் வாதிகளை என்ன செய்யமுடியும். இவர்கள் பதவியில் இருப்பதால் எமது சமூகமும் எமது நகரும் கண்ட அபிவிருத்திதான் என்ன.?
எமது கல்முனை நகரம் மாநகர சபையாக மாற்றம் பெற்றதன் பின்னர் அடைந்த முன்னேற்றம்தான் என்ன.? யாராவது பட்டியல் இடமுடியுமா?
நிச்சயமாக மக்களின் வாழ் வாதாரத்தையோ அல்லது ஊரின் அபிவிருத்தியையோ முன்னிலைப் படுத்தக் கூடியது எதுவுமே இல்லை.
அதேபோல ஜெர்மன் இன்னும் பல வெளிநாட்டு நகரங்களுடன் எமது மாநகரை இணைத்ததினால் நாம் அடைந்த அடைவுகள் அபிவிருத்திகள்தான் என்ன? இதுவரையில் சொல்லக்கூடிய வகையில் ஒன்றுமே இல்லை. மாநகர சபையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஒருசிலரை சுற்றுப்பயணம் அனுப்பியது மாத்திரம்தானா மிச்சம் ?
இருந்தபோதிலும் கல்முனையை பொறுத்தவரையில் அதிலும் குறிப்பாக கல்முனைக்குடியை பிரதி நிதித்துவப்படுத்தும் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர் கௌரவ ஏ.எம். பாரகத்துல்லாஹ் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் கௌரவ ஏ.எம். ரியாஸ் போன்றவர்களின் தன்னிகரில்லா சேவைகள் இவ்விடத்தில் நினைவு கூறப்படத்தான் வேண்டும். ஏனெனில், தனக்கு வழங்கப்பட்ட கடமைகளுக்கு மேலாக பாடசாலை மாணவர்கள் ஏனைய சமூக மேம்பாடுகளுக்கு இவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் இன்றியமையாததாகும் இவர்கள் இருவரும் கல்முனைக்குடி வாழ்மக்களால் என்றென்றும் பாரட்டப்படவேண்டியவர்களே.
இருந்தும் என்ன பலன் அத்திய அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் சீர் செய்யப்படவில்லையே இதற்க்கு பொறுப்பு கூறவேண்டியது யார்..!
மக்களே சற்று சிந்தித்து பாருங்கள்..!!
இன்றைய நிலையில் எமது ஊரின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவிற்கு சீரளிந்துள்ளன குறிப்பிட்டு சொல்லுமிடத்து
01. நாளாந்த கழிவகற்றல் செயற்ப்பாடுகள் மந்தகதியில் நடைபெறுகின்றன இதன் காரணத்தால் கல்முனைக்குடியின் வீதிகளின் இரு மருங்கிலும் குப்பைகள் தேங்கிக் கிடந்தது அந்தப்பகுதியே துர்வாடை வீசுகின்றது.
02. வெள்ளநீர் வடிந்தொடக்கூடிய சரியான வாய்க்கால்கள் இல்லை. இருக்கும் வாய்க்கால்களுக்கு மூடி என்பது இல்லை.
03. கழிவு நீர் செல்லக் கூடிய வாய்க்கால்கள் அனைத்தும் மண் நிரம்பிக் கானப்படுகின்ற்றது.
04. மக்கள் அதிகமாக பாவிக்கும் வீதிகள் கடற்க்கரை வீதிகள் போல மணல் நிரம்பிக்கானப்படுவதால் பிரயாணிகள், பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரிகத்துக்கு உள்ளாகின்றனர்.
05. கல்முனைக்குடியின் பெருமளவான வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இதுவரையில் செப்பனிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
06. அரச மற்றும் தனியார் பஸ்தரிப்பு நிலையம் மிக மோசமான நிலையில் பாவனைக்கு உதவாத நிலையில் கானப்படுகிண்டது.
07. பஸ்தரிப்பு நிலையம் நவீன சந்தை போன்றவற்றில் சரியான பாவிக்க கூடிய வகையான மலசகூடங்கள் இல்லை.
என்னும் எவ்வளவோ ஊர் சம்பந்தமான பிரச்சனைகளை அடுக்கிகொண்டே போகலாம்.
இதெற்கெல்லாம் தீர்வு தருபவர் யார்…..?
நிச்சயமாக மாநகர சபையை நிருவாகிப்பவர்கள்தான் இதற்க்கு பொறுப்புக்கூற வேண்டும் ஏனெனில் உங்களுக்கு கிடைத்த பதவிகள் பரிவாரங்கள் மக்களாகிய நாம் தந்த அமானிதங்கள் என்பதை மறந்துவிடலாகாது. எங்களிடமிருந்து வரிப்பணங்களை மாத்திரம்தானா? அறவிட நினைக்கின்றீர்கள் நாங்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் என்பது கனவில் மாத்திரம்தானா சாத்தியப்படும்.
மாண்புமிகு மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்களே..!!எமது கல்முனையின் உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய மக்களுக்கான சேவைகளையும் துரிதப்படுத்துங்கள் இல்லையேல் இனிவரும் காலங்களில் மக்கள் உங்களுக்கும் உங்களது அரசியலுக்கும் தக்கபாடம் கற்ப்பிக்க தயங்கமாட்டார்கள். எமது பிரதேச வாழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் பலதடைவகள் வேண்டியும் இன்னும் எமது ஊரின் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நீங்கள் காரிசனை காட்டாமல் இருப்பது எமக்கு வேதனையை உண்டுபண்ணுகின்றது.
இன்றைய நிலையில் எமது இலங்கைத் திருநாட்டின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது நாட்டில் சுமுகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன, மத வேறுபாடுகள் களைந்து அபிவிருத்தியே முன்னிலை என்பது எமது புதிய ஜனாதிபதியின் கௌரவ மைத்திரி பால சிறிசேனவின் கனவாகும். அதை நிறைவேற்றுவது மாநகர ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர் ஏனைய உறுப்பினர்களாகிய உங்களது கடமையாகும்.
எனவே கடந்த காலங்களை மறந்து இனி வரும் காலங்களில் எமது மாநகரத்தை அபிவிருத்தியின் உச்சத்துக்கு கொண்டு செல்லவேண்டியது உங்களதும் இப்பிரதேச வாழ் மக்களாகிய எங்களதும் கடமையாகும். எனவே இவ்விடயங்களை கருத்திற்கொண்டு எமது நகரின் உட்கட்டமைப்பு ஏனைய அபிவிருத்திகளை முன்னெடுத்து எம்மையும் எமது நகரத்தையும் முன்னேற்ற முன்வருமாறு எமது மாநகர மக்கள் சார்பாக உங்களிடம் வேண்டுகின்றேன்.
எமது இலங்கைத்தீவிலும் எமது கல்முனை மாநகரத்திலும் யாவருக்கும் வாழமான வாழ்வும் அபிவிருத்தியும் உருவாகட்டும்.
Published by

Leave a comment