ஏறாவூர்: காணி வளம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியம் வாய்ந்த வளமாக கருதப்படுகிறது. இவ் வளமானது சனத்தொகை அதிகரிப்பது போல பெருக முடியாத வளமாக உள்ளதால் இதனைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
அதிகமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு காரணம் உறுதி பதிவு முறையில் உள்ள குறைபாடுகளே என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான ‘காணிச் சட்டம்’ எனும் தொனிப் பொருளிலான பயிற்சி ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் அவர்களின்; தலைமையில் 24.01.2015 இன்று நிகழ்ந்த போது, வளவாளர் அஸீஸ் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
காணி விடயத்தில் அதிகமான மோசடிகள் நடக்கின்றது. மோசடியான முறையில் உறுதிகள் எழுதப்பட்டு வருவதும், பிறருடைய காணிக்கு உறுதி முடித்து சொந்தமாக்கிக் கொள்ளல் போன்ற சம்பவங்களினால் அதிகமானவர்கள் பாதிப்படைகின்றனர்.
உறுதி என்பது நொத்தாரிசு ஒருவரினால் எழுதப்பட்ட ஆவணம். அதன் பக்கத்தில் தபால் முத்திரைகளும் ஒரு காணிப் பதிவு முத்திரையும் இருக்கின்றது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட காணி பரிமாற்றம் சம்மந்தமான ஆவணம் எனலாம்.
உறுதி மட்டும்; சொந்தத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் அல்ல காணியின் சொந்தத்தை உறுதிப்படுத்த நீண்ட நடைமுறைக்கு உள்படுத்தப்படும் என்பதை அனைவர்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அளிப்பு என்பது ஜயபூமி, ரத்னபூமி, சுவர்ணபூமி எனவும் அழைக்கப்படும். அதன் முன் பக்கத்தில் பெரிய அரச சீல் ஒன்று இருக்கும். அனுமதி என்பது பிரதேச செயலாளர் அலுவலக்தினால் வழங்கப்பட்ட காணி ஆவணமாகும்.
1992ம் ஆண்டு பிரதேச செயலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு காணி வேலைகள் பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் அரச காணிகளை பாதுகாக்கும் பொறுப்பு கிராம சேவை உத்தியோகத்தர்கள் காணி வெளிக்கள உத்தியோகத்தர்களின் கடமையாக வழங்கப்பட்டுள்ளது. காணிப்பிணக்குகளை தீர்ப்பதில் உருத்து பதிவுச்சட்டம் பொருத்தமானதும் முக்கியத்துவமானதுமாகும் என அஸீஸ் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
Published by

Leave a comment