காத்தான்குடி: பாராளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களுக்குள் இடம்பெற இருக்கும் இந்நிலையில், அரசியல் கட்சிகளும், முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகளும் தேர்தலை எதிர்கொள்ள அதிக அக்கரை எடுத்துவரும் நிலை இப்போதே ஆரம்பமாகிவிட்டது. தேர்தல் காலங்களில் இலங்கையில் என்றும், எங்கும் இல்லாத விசேட நிகழ்வுகளும், சம்பவங்களும் காத்தான்குடியிலேயே இடம்பெற்றுவருவதும் கடந்தகால வரலாறுகள்.
நிலைமை இவ்வாறிருக்க, 1989 இல் இருந்து காத்தான்குடியின் அசைக்க முடியாத அரசியல்வாதியாகத் திகழ்ந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுடன், கடந்த இரண்டரை வருடங்களாக அரசியல் நட்புக்கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் பிரிவு, ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவுகளை பல மடங்குகளாக சரிய வைத்துள்ளது.
காத்தான்குடியில் மாத்திரமன்றி, அயல் ஊர்களான காங்கேயனோடை மற்றும் பாலமுனையிலும் ஹிஸ்புல்லாஹ்விற்கான ஆதரவுகள் வீழ்ச்சியடைந்து வருவது அண்மையில் அவரது கூட்டங்களில் பிரதிபலித்திருந்தன.
சுமார் 8 வருடங்களுக்கும் மேலாக நல்லாட்சியை காத்தான்குடியில் மலர ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின், கடந்த கால அரசியல் காத்தான்குடியைவிட்டு அகன்று சென்று, தேசிய ரீதியில் தேசிய முன்னணியாக உருவாக்கம் பெற்றதைத் தொடர்ந்து, நல்லாட்சியை நம்பியிருந்த பல ஆதரவாளர்களும், தற்பொழுது சிப்லி பாரூக்கை நோக்கி திசை திரும்பி இருக்கின்றனர்.
காத்தான்குடியில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த ஹிஸ்புல்லாஹ் தரப்பும், நல்லாட்சியை மலர உருவாக்கப்பட்ட தேசிய முன்னணியும், காத்தான்குடி அரசியலில் மென்மேலும் காலூன்றூன்றி நிற்பதற்கு தத்தளிக்கின்றன.
மக்களை மறந்த தனது விருப்பு, வெறுப்பிற்காக பேரளவில் கொமிசன் கொன்ரக் அபிவிருத்தியை மேற்கொண்ட ஹிஸ்புல்லாஹ்வின் கடந்த கால அரசியல் காத்தான்குடி மக்களுக்கு கைப்பங்காய் ஆகிவிட்டது.
இதேபோல், மக்களின் காலடியில் சென்று அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அட்டை முறையை நடைமுறைப்படுத்தி முன்னெடுத்துவந்த நல்லாட்சிக் காரர்களின் திட்டங்கள் புதுத் தும்புக்கட்டு நல்லா கூட்டும் என்பது போல் கூட்டிவிட்டு, இப்போது மூளையில் சாய்ந்து கிடக்கிறது.
இதனால், பிரபலமான கட்சிகளுடன் பேரம்பேசியாவது மாகாணசபை, மற்றும் பாராளுமன்றக் கதிரை ஒன்றையாவது பெற்றுக்கொள்ளும் தேசிய ரீதியான அரசியலில் நல்லாட்சி முன்னணி கால்பதித்திருக்கின்றது.
இப்போது குழம்பிப்போயிருக்கும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு மற்றும் நல்லாட்சி முன்னணி ஆகிய இரு குட்டைகளும், உள்ளுர் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றன.
இதனால் ஊழல், மோசடி அறிக்கைகளும், அதற்கு எதிரான சவால்களும் இப்போது காத்தான்குடியில் ஹைலைட்டாகப் போய்க்கொண்டிருக்கின்றது.
மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து, அவர் வெற்றிபெற்றதன் பின்னர், அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் அரசியல் நகர்வுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றதா என சந்தேகம் காத்தான்குடி மக்களிடம் எழுந்துள்ளது.
தேர்தல் காலத்தில் அன்றைய ஆளும் தரப்பு அரசியல் வாதியின் உயிர் அச்சுறுத்தலையும் துச்சமென மதித்து, இந்த காத்தான்குடி மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த சிப்லி பாரூக் இன்று மௌனித்துப் போய்விட்டார்.
அவரது குரல்கள் பேரம்பேசுதல்கள் மூலம் நசுக்கப்பட்டிருக்கிறதா? என்ற சந்தேகமும் தற்பொழுது மேலும் மக்களிடத்தில் எழுந்திருக்கின்றது.
சிப்லி பாரூக்கிடம் முக்கிய மௌலவி, ஹாஜிமார்களை அனுப்பி, ஹிஸ்புல்லாஹ் தரப்பு சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, மீண்டும் தங்களுடன் சேர்த்துக்கொள்வதில் இரகசிய பேச்சுக்கள் இடம் பெற்றிருந்ததாகவும் சில தகவல்கள் ஊகிக்க முடிகிறது.
காத்தான்குடியின் துரும்புச் சீட்டாக இருக்கும் பொறியியளார் சிப்லி பாரூக்கை நோக்கி, தள்ளாடும் கட்சிகளால் வீசப்படும் வலையில் சிக்குவாரா சிப்லி பாரூக்…?
Published by




Leave a comment