“பொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய வரி அமுலாகும் என்பது தவறு”

“கோத்தபாயாவுக்கு செலுத்தப்பட்ட 2100 கோடி ரூபாவை நாம் மீண்டும் திறைசேரிக்கு எடுத்திருக்கிறோம்”

raviகொழும்பு: எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன. இவ்வாறு விலை குறைக்கப்பட்டாலும் மறுபக்கத்தால் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவிருப்பதாக கூறப்படும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

திறைசேரி வங்குரோத்து நிலையில் இருக்கின்றபோதும் மக்கள் மீது ஒரு சதத்தையேனும் சுமையாக்கும் வகையில் வரி விதிப்புகள் அமையாது. மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் வகையிலேயே அரசாங்கம் முன்வைக்க விருக்கும் இடைக்கால வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும் என அமைச்சர் கூறினார்.

மக்களுக்கு சுமையைக் கொடுக்காது எவ்வாறு வரவுசெலவுத்திட்டம் தயாரிக்க முடியும் என்பதை எதிர்வரும் 29ஆம் திகதி முன்வைக்கவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருட்களின் விலைகளைக் குறைத்து புதிய வரிகளின் மூலம் திறைசேரிக்கு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இவ்வாறான கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை.

முந்திய அரசாங்கத்தின் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நிதி அமைச்சு விரும்பியது போல திட்டங் களைத் தயாரித்து செயற்படுத்தியுள்ளது. மத்திய வங்கியும் அவ்வாறே நடந்துள்ளது. நிதி அமைச்சில் இடம்பெற்றிருக்கும் மோசடிகள் உள்ளிட்ட முந்திய ஆட்சியாளர் களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளை தாம் விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மக்கள் மீது சுமையை ஏற்றாமல் எவ்வாறு வரவுசெலவுத்திட்டத்தை தயா ரிக்க முடியும் என்பதை நாம் எதிர்வரும் 29ஆம் திகதி காண்பிப்போம். நாம் ஏற்கனவே உறுதி வழங்கியதைப்போன்று அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் நாம் உறுதியளித்ததைப் போன்று 5000 ரூபாவால் அதிகரிக்கப்படும். அதேபோல தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம். தனியார் துறையினர் மீது சுமத்தப்பட்டிருந்த வரிகள் குறைக்கப்படவிருப்பதால் தனியார்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்க முடியுமாக இருக்கும். தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு எம்மால் கோரிக்கைவிடுக்க மாத்திரமே முடியும்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவுக்கு செலுத்தப்பட்ட 2100 கோடி ரூபாவை நாம் மீண்டும் திறைசேரிக்கு எடுத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment