கல்குடா: மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தொகுதியில் உள்ளடங்கும் ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் சூழவுள்ள இதர பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கமாக முக்கிய கலந்துரையாடலொன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (22) இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் கல்குடா தொகுதி சூரா சபை தலைவர் அஷ்ஷெய்க் ஹாமிது சதகா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். அப் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் இன்மையால் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்கள் அமைச்சரிடம் முன்வைத்தனர். அவற்றை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம், இக் குறைப்பாட்டை நிவர்த்திக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்நோக்கும் பல்வேறு சிக்கல்களையும், நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இம் மக்களது குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் எதிர்வரும் 1ஆம் திகதி மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், நீர் பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை வரவழைத்து இவ்விடயம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.
இக் கூட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் பொது முகாமையாளர் பாலசூரிய, மேலதிக பொது முகாமையாளர் ஜெயசிறிவர்தன, திட்டமிடப் பணிப்பாளர் எம்.ரீ.எம். ராஸில், பொறியியலாளர்களான ரஷீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கல்குடா தொகுதி வாழைச்சேனை, ஓட்டமாவடி உள்ளிட்ட அயல் பிரதேச குடிநீர்த் திட்டம் சம்பந்தமாக முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பத்திரம், செலவுத்தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களுக்காக மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வாகனேறி குளத்திலிருந்து நீரைப்பெற்று விநியோகிப்பதற்கு 4 பில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்துவதாயின் குளத்தின் உயரத்தை அதிகரிக்க நேருவதோடு, நீர் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் புகையிரதப் பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கும் நிலைமையும் ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்வாறிருக்க, றூகம் நீர்பாசன குளத்திலிருந்து வாழைச்சேனை ஓட்டமாவடி உட்பட சூழவுள்ள பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான மற்றுமொரு செயல்திட்டத்திற்கு பெருந்தொகைப் பணமான 22 பில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்னுமொரு மாற்றுவழியாக, மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீரைப் பெறும் சாத்தியக்கூறும் உள்ளது. ஆனால், வயல் நிலங்களில் குறிப்பிட்ட சில காலப்பகுதிகளில் பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் மாதுறு ஓயா நீர்த் தேக்கத்திலிருந்து நீரை விநியோகிப்பது தடைப்படும். அந்தக் காலப்பகுதிகளில் இருபோகப் பயிர்ச் செய்கைகளின் போதும் குறிப்பிடத்தக்க காலப் பகுதியில் இந்த நிலைமை ஏற்படும் என கூறப்படுகின்றது.
அந்தக் காலப்பகுதியில் சூழவுள்ள சிறு குளங்களில் இருந்து நீரைப்பெற்று சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்யும் சாத்தியம் பற்றியும் ஆராயப்பட்டது.
Published by


Leave a comment