– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
கொழும்பு: “நாட்டில் நல்லாட்சியின் அத்திவாரத்தை நாசமாக்குவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே முன்னின்று பங்களிப்புச்செய்தனர். இவ்வாறு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு துணை போனவர்களே இன்று நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள்.
இது இன்று எம்மை வெட்கப்பட வைத்திருக்கிறது.” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
“மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்த மக்களைப் பாராட்டுவோம்” என்ற மகுடத்தில் NFGG நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்புத் தொடரில் மற்றுமொரு நிகழ்வு (21.01.2015) கொழும்பில் நடை பெற்றது.
NFGGயின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத் தலைமையில், தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக சமூகநீதிக்கான இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவ சோபித தேரர் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி MM.சுஹைர், மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்மேலும் தெரிவித்ததாவது..,
“இன்று நாட்டில் நல்லாட்சி என்கின்ற வார்த்தை பிரபலமான பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஊழல் மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வின் காரணமாகவே நடக்கமுடியாது எனக் கருதிய ஆட்சி மாற்றம் ஒன்று இங்கு நடந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நல்லாட்சியின் அத்திவாரமே சிதைத்து நாசமாக்கபட்டது. அவ்வாறு நாசமாக்கப்படுவதற்கான பங்களிப்பை நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னின்று செய்தார்கள் என்பதனை நினைத்துப் பார்க்கும்போது முஸ்லிம் சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.
கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ச மேற் கொண்ட இரண்டு நடவடிக்கைகள் நல்லாட்சி மீதான மரண அடியாக இருந்திருக்கிறது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே நமதுமுஸ்லிம் கட்சிகள் அந்தப் பாதக செயலுக்கு எவ்வித தயக்கமுமின்றி துணை போனார்கள். அதில் ஒன்றுதான் மஹிந்த ராஜபக்ச அவர்களினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தி சட்டமாகும். மஹிந்த ராஜபக்சவின் சொந்தகட்சி உறுப்பினர்களே அதற்கு ஆதரவளிப்பதற்கு தயங்கிக்கொண்டிருந்த வேளையில் முஸ்லிம் அரசியல் வாதிகளோ எவ்வித தயக்கமுமின்றி அதற்கு ஆதரவளித்தார்கள்.
18 ஆவது திருத்த சட்டம் என்பது முஸ்லிம்களின் நலன்களைப்பாதிக்கின்ற ஒன்றல்ல என்பதனாலேயே தாம்ஆதரவளித்ததாக அதற்கு விளக்கம் வேறு சொன்னார்கள். ஆனால் அழுத்கம சம்பவத்தின் போது நமக்குக் கிடைக்கவேண்டிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்காமல் போனதற்கு இந்த சட்ட மூலமே அடிப்படைக் காரணமாகும். அதுபோலவே எமக்கெதிரான இனவாத நடவடிக்கைகள் தலைவிரித்தாடுவதற்கும் இந்த சட்ட மூலம் ஏற்படுத்திய அரசியல் சூழ்நிலைகளே காரணமாக அமைந்தது.
நல்லாட்சியின் மீது விழுந்த மற்றுமொரு அடிதான் நீதித்துறைமீதான அடியாகும். நாட்டின் சட்டத்தை மதித்து அரசாங்கத்தின் விருப்பத்திற்குமுரணாக தைரியமாக தீர்ப்பினை வழங்கிய முன்னாள் பிரதமநீதியரசர் மிக அநியாயமான முறையில் பதவியிறக்கப்பட்டார். நல்லாட்சியின் அத்திவாரமாகத் திகழும் நீதித் துறையின் சுதந்திரத்தை பறிக்கும் செயலாக அது அமைந்தது. அதற்கும் முன்னின்று துணை போனவர்கள் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளே. அதாவது முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரேரணைக்கு முன்னின்று கையெழுத்திட்டவர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றார்கள்.
இப்படியாக இந்நாட்டில் நல்லாட்சியைச் சிதைத்த மஹிந்தராஜபக்சவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னின்று பங்களிப்புச் செய்த வரலாற்றை முஸ்லிம் அரசியல்வாதிகளே செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அராஜகங்களுக்கு துணை போனவர்களே இன்று நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்திலும்அங்கம் வகிக்கிறார்கள் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. இதனை முஸ்லிம் சமூகம் கவலையோடு கருத்திற் கொண்டு எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டியது முக்கி விடயமாகும்”.
இந்நிகழ்வில் NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் நளீமி, NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் மற்றும் சிராஜ் மஸ்ஹூர் ஆகியோரும் கலந்துகொண்டுன்தனர்.
Published by

Leave a comment