கொழும்பு: யுத்தத்தின் போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிமக்களை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
நேற்று (22) அமைச்சுக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான ஆணையாளரின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பின் போதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள அகதிகளான மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும் போது அவர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் புனர்நிர்மாண வேலைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் அரசாங்கத்தின் கடமை என அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இவ்வேலைத்திட்டத்திற்கான உதவி ஒத்தாசைகளை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பெற்றுத்தரவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான பிரதிநிதிகள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
மீள்குடியேற்றம் செய்து மக்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது அதற்கான உதவிகளை பெற்றுத்தருவதற்கும் அவர்கள் இதன் போது இணக்கம் தெரிவித்தனர்.
இந்தியாவில் அகதி முகாம்களில் இருக்கும் மக்களை நாடு திரும்பி தங்களுடைய சொந்த கிராமங்களில் வாழ்வதற்கு அவர்களை ஊக்குவிக்குமுகமாக இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அவர்களிடம் எடுத்துச் சொல்ல தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மீள்குடியேற்றம் புனர்நிர்மாண வேலைகளை முன்னெடுக்கும் போது தேசிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்புமின்றி இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கப் போவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதன் போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளரின் பிரதிநிதிகளான கொலம் அப்பாஸ், சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் லகூர் இவன்சி, அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை மற்றும் மேலதிகச் செயலாளர் எம்.எம். நயீமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment