பிரான்ஸ்: தாக்குதலில் பொதுமக்களை காப்பாற்றிய முஸ்லிம் ஊழியருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை

franceபரிஸ்: பரிஸ் நகரில் யூதப் பெருவணிக அங்காடி ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியபோது, அங்கிருந்த பலரைக் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் கடை ஊழியர் ஒருவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குடியுரிமை வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பிரெஞ்சு பிரதமர் மன்யுவெல் வேல்சும் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காசென்யுவெவும், லசானா பாத்திலி என்ற அவர் காட்டிய துணிச்சலுக்காக, நாட்டின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

france
லசானா பாத்திலி

24 வயதான இந்த லசானா பாத்திலி என்ற ஊழியர், இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் கடையில் இருந்த பலரை அங்காடியின் அடித்தளத்தில் இருக்கும் குளிர்பதனமூட்டப்படும் அறைக்குக் கொண்டு சென்று , அங்கு மின்சார இணைப்பைத் துண்டித்து, துப்பாக்கிதாரி தாக்குதலை நடத்தியபோது, பொலிசாரையும் உதவிக்கு வரச்சொல்லி தொடர்பு கொண்டாராம்.

இவருக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கக் கோரி மகஜர் ஒன்று சுற்றுக்கு விடப்பட்டு பலர் அதில் கையெழுத்திட்டனர். அவர் ஏற்கனவே பிரான்சில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த ஆண்டுதான் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த அங்காடியில் தாக்குதலை நடத்திய , அமெடி குலிபாலி என்ற துப்பாக்கிதாரி, பொலிசாரால் சுட்டுக்கொல்லப்படுமுன்னர், இந்த அங்காடியில் அவர் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்த நான்கு யூதர்களை சுட்டுக்கொன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment