கொழும்பு: இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு இந்தப் பாராளுமன்றத்திற்குள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு காணப்படும். 13 ஆவது திருத்தமும் ஒற்றையாட்சிக்குள்ளேயே உள்ளடக் கப்பட்டிருக்கின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.
18ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 19ஆவது திருத்தம் ஊடாக மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்கள் கொண்டு வரப்படுவதோடு நிறைவேற்று அதிகாரத்தின் ஏகபோக அதிகாரங்களும் குறைக்கப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது கன்னி பாராளுமன்ற அமர்வு நேற்று இடம்பெற்றது. இங்கு புதிய அரசின் கொள்கைகளை விளக்கி உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்கிறோம். அதற்குள்ளேயே 13 ஆவது திருத்தமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. எனவே இனியும் காலம் தாழ்த்தாது தமிழ் தேசிய கட்டமைப்பு மற்றும் சுதந்திரக் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்க்கமான தீர்வை காண வேண்டும்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நாம் காணவேண்டும். எனவே தான் விமல் வீரவன்ச எம்.பிக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிழையான வழியில் வழிநடத்தினீர்கள். அதனால் தான் மஹிந்த தோல்வி கண்டார்.
எனவே மீண்டும் நாட்டில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என விமல் வீரவன்ச எம்.பியை கேட்டுக் கொள்கிறேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாம் முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் பதில் கூறும் ஜனாதிபதி முறைமையை உருவாக்குவோம்.
17 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது. தன்னிச்சையான ஏகபோக அதிகாரம் கொண்ட 18 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்போம். அத்துடன் கண்காணிப்பு குழுக்களை அமைப்போம். பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பாதுகாப்போம். எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
எதிர்வரும் 29 ஆம் திகதி சபையில் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பெரும்பாலான சலுகைகளை வழங்கி வாழ்க்கை செலவை குறைப்போம். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி இது தொடர்பில் விவாதம் நடத்த முடியும். ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பாராளுமன்றம் சம்பிரதாய பூர்வமாக கூடும் இடம் என்பதை மாற்றியமைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கி பலப்படுத்தப்படுத்துவோம்.
தெற்காசியாவில் புதியதொரு அரசியல் கலாசாரத்திற்கு நாம் அடித்தளமிட்டுள்ளோம். 100 நாள் திட்டத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியும் கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகள் என்றும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு நாம் செயற்பட வேண்டும். எமது இலக்கு நல்லாட்சியாகவே இருக்க வேண்டும். அத்தோடு 19 திருத்த சட்ட மூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றுவோம். இது மக்களின் உரிமையாகும்.
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சட்டப் பிரேரணைகள் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும். எதிர் கட்சிகளுடன் இவை தொடர்பாக விவாதிப்போம். அதன் போது உங்களது ஆக்கபூர்வமான திருத்தங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கடந்த காலங்களில் பாராளுமன்றத்தின் கௌரவம், அதிகாரங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. அதனை மீண்டும் உயிர்ப்பித்து பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம். குடும்ப ஆட்சிக்கு பதிலாக மக்களாட்சி உறுதிசெய்யப்படும். எமது கட்சிககள் தனிப்பட்ட கொள்கைகள் வெவ்வேறு இலக்குகள் சிந்தனைகளை கொண்டிருந்தபோதும் பொதுவான வேலைத் திட்டத்திற்காக கைகோர்த்தோம். எனவே ஒற்றுமையுடன் இணைந்து தீர்மானம் எடுத்து ஆட்சியை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Published by
![RanilWickramasinghe[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/ranilwickramasinghe1.jpg?w=109&h=150)
Leave a comment