காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலளார்கள் சந்திப்பு ஒன்று அதன் காரியாலயத்தில் நடைபெற்றபோது முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,
‘தேர்தலுக்குப் பின்னர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ள அதிரடியான நிலைப்பாடானது பலருக்கு ஆச்சரியத்தை தந்திருந்தாலும் எங்களைப் பொறுத்தவரைக்கும் ஆச்சரியமான ஒன்றல்ல.
இப்போது மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு தீவிரமான ஆதரவை வழங்குகின்ற பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மைத்திரி வெற்றி பெற்றால் மைத்திரி அணிக்கு பாய்ந்து வருகின்ற முதலாவது நபராக இருப்பார் என்ற செய்தியை நாங்கள் தேர்தலுக்கு முன்னரே சொல்லியிருந்தோம்.
ஏனென்றால் இவரது கடந்த கால அரசியல் அப்படித்தான் இருந்திருக்கின்றது.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எப்போதுமே கொள்கை நிலைப்பாட்டுக்காக உழைத்தது கிடையாது. நிலையான கொள்கையில் இருந்தவரும் கிடையாது. தனது பதவியை தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தனது கொள்கையை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டுமோ அதற்கேற்றபடி மாற்றிக் கொள்வார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இதன்மூலம் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மீண்டும் மீண்டும் மக்களை பிழையாக வழி நாடத்துகின்ற விடயத்தை செய்து கொண்டிருக்கின்றார்.
இந்த நாட்டுக்கு பொருத்தமான ஜனாதிபதியினை தா என இறைவனிடம் பிராத்தித்தேன் என முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகின்றார்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட வெல்லக் கூடிய இரண்டு பேரில்இ ஒருவர் கடந்த பல வருடம் நாட்டை ஆட்சி செய்த அனுபவம் நமக்கிருக்கின்றது. அந்த ஆட்சியிலே நாம் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் எல்லாம் நமக்கிருக்கின்றது.
மற்றவர் இந்த துயரங்களை எல்லாம் நீக்குவேன் என்ற தெளிவான திட்டத்துடன் ஆட்சிக்கு வருகின்றார்.
இந்த இரண்டு பேருக்கு மத்தியில் மக்கள் தெளிவாக ஒருவரை தெரிவு செய்தனர். இந்நிலையில் மக்களின் துயரத்திற்கு காரணமான நபருக்கு மிக தீவிரமான ஆதரவை வழங்கி விட்டு மக்களுக்கு பொருத்தமான ஜனாதிபதியைத்தான் நாங்களும் கேட்டோம் என்று பிராத்தனை செய்தோம் என இவர் சொல்லுகிறார். இவர் நமது மக்களை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றார் என்று எனக்கு விளங்கவில்லை.
இவருடைய அரசியல் முதிர்ச்சி, இவருடைய மனோநிலை, இவர் மக்களைப் பற்றி என்ன நினைத்துள்ளார் என்பனவற்றைப் பார்க்கும்போது கவலையாக இருக்கின்றது.
தெட்டத்தெளிவான தீமையை வெல்ல வைக்க அனைத்து தீமைகளையும் செய்த முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ‘இப்படியான நல்ல தலைமைத்துவத்தை தா’ என நாங்கள் பிராத்தித்தோம் என அவர் இப்போது கூறுவதானது அவர் போன்ற அரசியல் வாதிகளின் சுயரூபத்தை இறைவன் நமக்கு மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளான் என்றே கருத வேண்டும்.’ என்று தெரிவித்தார்.
Published by

Leave a comment