மஹிந்த-சீன ஒப்பந்தங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன

mahinda chinaகொழும்பு: இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டத்திற்கான செலவு விபரங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்துமுடியும் வரை, அந்த நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்திவைப்பதற்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குருநாகல் ஊடாக கொழும்பையும் கண்டியையும் வடக்கில் யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் விதத்தில் அமையவிருந்த இந்த அதிவேக நெடுஞ்சாலை சீனாவின் கடனுதவியின் மூலம் அமைக்கப்படவிருந்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, இந்த நெடுஞ்சாலை வேலைத்திட்டம் வைபவ ரீதியாக மகிந்த ராஜபக்ஷவினால் தொடங்கப்பட்டிருந்த போதிலும், உண்மையில் களமட்டத்தில் எந்தவித வேலைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்று புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

இதேபோலவே, மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சீனாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் தொடர்பிலும் புதிய அரசாங்கம் ஆய்வு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவின் கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள செலவுகள் தொடர்பில் சுயாதீனமான கணக்காய்வு நிறுவனங்களைக் கொண்டு ஆய்வுநடத்தவுள்ளதாக கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான புதிய துணை அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

‘சீனாவின் ஆதிக்கம்’

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதால் கவலையடைந்துள்ள இந்தியாவையும் மேற்குலக சக்திகளையும் புதிய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சிப் படுத்தும் என்று பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, 1.5 பில்லியன் டொலர் பெறுமதியில் துறைமுக கட்டுமானத்துக்காக சீன நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் ஆய்வுநடத்தப்பட இருக்கின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றை இந்த சீன நிறுவனம் முழுமையான உரித்துடன் சொந்தமாக வாங்கியுள்ளமை தொடர்பில் கவலைகள் உள்ளன.

இப்படியாக சீனாவுடனான வேலைத்திட்டங்களை ஆய்வுசெய்யும் புதிய அரசாங்கத்தின் அறிவிப்பின் பின்னணியில், இலங்கையுடன் தொடர்ந்தும் கூட்டுறவை எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

mahinda china

இருதரப்பு நன்மைகள் மற்றும் பொது நலன்களின் அடிப்படையிலேயே சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இருந்துவருவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ கூறியுள்ளார்.

ஜனவரி 8-ம் திகதி தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்காக பெரும்பாலும் சீனாவிடமே தங்கியிருந்தது. 2009-ம் ஆண்டில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது முதல், ராஜபக்ஷ அரசாங்கம் பெரும் வேலைத்திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 6 பில்லியன் டொலருக்கும் அதிக கடனுதவியை பெற்றுள்ளது.

சீன முதலீட்டில் அமைந்த பல வேலைத்திட்டங்களில் அளவுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக எதிரணி முன்னெடுத்திருந்த குற்றச்சாட்டுக்கள் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு உதவியதாக அவதானிகள் கூறுகின்றனர்.

Published by

Leave a comment