காத்தான்குடி: மிக நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்த பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் வீதி விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டம் 19-01-2015 இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்தார்.
இவ் வீதி விஸ்தரிப்பு பணிகளின் முதற்கட்டமாக சட்டவிரோத கட்டிடங்கள், மதில்கள் காத்தான்குடி நகர சபையினால் உடைக்கப்பட்டு வருகின்றன.
இதன் போது வீதியின் நடு மத்தியிலிருந்து வீதி அபிவிருத்திக்கு தேவையான 5 மீற்றர் 5 மீற்றர் பகுதி காத்தான்குடி நகர சபையின் பெக்கோ மூலம் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றது.
சட்டவிரோத கட்டிடங்கள், மதில்கள் உடைக்கும் இப் பணியில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட் உட்பட நகர சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்படி சட்டவிரோத கட்டிடங்கள், மதில்களை அகற்றுமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு காத்தான்குடி நகர சபை அறிவித்திருந்தும் அதனை அவ் வீட்டு உரிமையாளர்கள் அகற்றாத காரணத்தால் காத்தான்குடி நகர சபை அகற்றி வருவதாக அதன் தவிசாளர் தெரிவித்தார்.
குறித்த வீதி இரண்டு வழி போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதோடு மேலதிகமாக சைக்கிள் மற்றும் செல்லக்கூடிய வகையில் ஒரு வழியும், வடிகானும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment