பசில் ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம்!

bazilகொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நாட்டில் சட்டவிரோதமாக சென்றிருப்பதால், அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 11 ஆம் திகதி அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு சென்ற அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவர் வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷராந்தி ராஜபக்ஷவின் சகோதரரான ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் பூரண உதவியுடன் பசில், முக்கியஸ்தர்கள் வெளியேறும் வழியுடாக புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு தேவையான ஆவணம் நிஷாந்த விக்ரமசிங்கவின் ஆலோசனையின் படி நடவடிக்கை முகாமையாளர் தயாரித்துள்ளார். விமான நிலைய அத்தியட்சகர்கள் இருவரின் உதவியுடன் பசில் ராஜபக்ஷ முக்கிய பிரமுகர்கள் செல்லும் ஏ.7 வழியாக விமான நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்து ஈ.கே.349 என்ற இலக்க விமானத்தி்ல் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய மற்றும் முகாமையாளர் சேன நந்திவீர ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய தொழிற்சங்கங்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்வதற்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாது பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சு அல்லது நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். விமான நிலையத்தின் தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின் கையொப்பத்துடன் பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும் அதற்கு விமான நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் எழுத்து மூலம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Published by

One response to “பசில் ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம்!”

  1. Its like catching the tail after allowing the horse to escape! What happened to our country’s intelligent service!

Leave a reply to nizamhm1944 Cancel reply