ஒருநாள் போட்டியில் வேகச் சதம்: ஏ.பி. டி வில்லியர்ஸ் சாதனை! (காணொளி)
ஜொஹன்னெஸ்பேர்க்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் வேகமாக 100 ஓட்டங்களைக் குவித்த சாதனையை தென்னாப்பிரிக்க அணிவீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலைநாட்டியுள்ளார். ஜொஹன்னெஸ்பேர்க் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 31 பந்துகளில் டி வில்லியர்ஸ் இந்த சதத்தை நிகழ்த்தினார்.
கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 பந்துகளில் சதம் குவித்து வேகமான 100 ஓட்டங்களுக்கு சொந்தக்காராக இருந்தவர் நியுசிலாந்தின் கொரே அண்டர்ஸன். நேற்று டி வில்லியர்ஸ், 8 பவுண்டரிகளையும் 10 சிக்ஸர்களையும் விளாசித் தள்ளி நேற்றுண்டர்ஸனின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவின் வேகமான அரைச்சதம் என்ற 19 ஆண்டுகால சாதனையையும் டி வில்லியர்ஸ் 16 பந்துகளில் 50 ஓட்டங்களைக் குவித்து முறியடித்துள்ளார்.
30 வயதான டி வில்லியர்ஸ், இன்று 44 பந்துகளில் 9 பவுண்டரிகளையும் 16 சிக்ஸர்களையும் விளாசித்தள்ளி மொத்தமாக 149 ஓட்டங்களைக் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகளவான சிக்ஸர்கள் என்ற சாதனையையும் டி வில்லியர்ஸ் இதன் மூலம் சமப்படுத்தியுள்ளார்.
ஏ.பி.டி வில்லியர்ஸ்
ஐபிஎல் போட்டிகளில் 2013-ம் ஆண்டு ஏப்ரலில் 30 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்திருந்த கிரிஸ் கெய்ல்-இன் சாதனையே கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக குவிக்கப்பட்ட சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. இவ் ஆட்டத்தில் 2 விக்கெட்டுக்கள் இழப்புக்கு தென்னாப்பிரிக்க அணி குவித்துள்ள 439 ஓட்டங்களே, அந்த அணி இதுவரை குவித்துள்ள ஆகக்கூடிய ஒருநாள் ஓட்ட எண்ணிக்கை.
துவக்க ஆட்டக்காரர்களான ஆம்லாவின் 153 ஓட்டங்களும் ரோசோவின் 128 ஓட்டங்களும் இதில் அடங்கும்.
Leave a comment