அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது

parliamentகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அது தனது பெரும்பான்மையை நாளை மறுதினம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப் பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை அங்கீகரித்து மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு இணைந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்களான விஜித் விஜிதமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஜகத் புஷ்பகுமார, ரெஜினோல்ட் குரே, எஸ்.பி.நாவின்ன, அதாவுட சென விரட்ன உள்ளிட்ட சுமார் 15 பேர் தேசிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர்.

அத்துடன் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி முரளிதரன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, டியூ.குணசேகர, உதித் லொக்குபண்டார, சனத் ஜெயசூரிய, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதர், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற கன்னியமர்வு நாளை மறுதினம் 20ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிப்பர் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment