கொழும்பு: இலங்கையின் முன்னாள் யுத்த பிரதேசமான வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்று விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.
வடபகுதியில் அமைதி நிலவுவதால் அங்கு வெளிநாட்டவர்கள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததை அடுத்தே இந்தத் தடை நீக்கப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.
எனினும் வடபகுதியில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகின்ற நிலையில், வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை குறைக்க வேண்டும் என்றும் இராணுவத்தினர் சிவில் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுவதை தடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவந்தது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
எனினும், இந்த நிலையிலேயே வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு இராணுவத்திடம் இருந்து வந்துள்ளது.
BBC Tamil
Published by

Leave a comment