‘முஸ்லிம் சமூகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை நிகழத்த வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றது’: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்

RahmanNFGG ஊடகப்பிரிவு

பாலமுனை: ‘அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களின் நலன்களை மையப்படுத்தியதாகவே மேற்கொள்ளப்படல்வேண்டும். ஆனால், அந்த அரசியல் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசியல் வாதிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு மாத்திரமே பயன்படுத்தபடுகிறது.

எனவே, தேசிய மட்டத்தில் நடந்திருப்பது போலவே, ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை நம் சமூக மட்டத்திலும் நிகழத்த வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கின்றது’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியலாளர் MM. அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றி மகிழ்ச்சியினை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நடாத்தப்பட்ட மற்றுமொரு மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 11.012015 ஆம் திகதி பாலமுனை மற்றும் காங்கேயனோடை பிரதேசங்களில் நடாத்தப்பட்ட மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அப்துர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது,

‘இன்று நம் நாட்டில் ஒரு பெரிய மாற்றம் நிகழந்திருக்கிறது. மக்களுக்காக முன்னின்று குரல் கொடுக்க வேண்டிய தருணத்தில் அரசியல் தலைவர்களெல்லாம் தயங்ககிக்கொண்டும், பதுங்கிக் கொண்டும் இருந்த சந்தர்ப்பத்தில் மக்களே முன்வந்து இந்த மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

மக்களின் நலன்களை பாதுகாத்து மேம்படுத்த வேண்டிய ஆட்சிமுறை மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், அரசியல்வாதிகளின் நலன்களை மேம்படுத்துவதாகவும் மாத்திரமே இருந்து கொண்டிருந்ததன் காரணமாகவே மக்கள் இந்தமாற்றத்தை நிகழத்தினார்கள். இந்த நிலைமையை எமது சமூகத்தில் நிலவும் அரசியல் நிலவரங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது போன்ற ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை நிகழத்த வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது.

அந்த வகையில், அரசியல் என்பது மக்களின் நலன்களை மாத்திரமே மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்கான சகல நன்மைகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஆனால், நமது அரசியல் அவ்வாறில்லை.

அரசியல் வாதிகளினதும் அவர்களுக்கு நெருக்கமானவர்களினதும் நலன்களை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் பொரளாதாரத்தை உயர்த்துவதற்காகவுமே நம் சமூகத்தில் நிலவும் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நிலைமைக்கு சாட்சியாக இந்தப் பாலமுனைப் பிரதேசமும் இருக்கிறது. கடந்த 25 வருடத்தில் நமது அனுபவத்தைக் கொஞ்சம் மீட்டிப் பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புரியும்.

மக்களுக்காகவே அரசியல் செய்கிறோம் எனக் கூறிஅதிகாரங்களை பெற்றுக் கொண்டவர்களின் தனிப்பட்டவாழ்க்கை எத்தனை ஆயிரம் மடங்கு முன்னேறியிருக்கின்றது.? அதே வேளை அவர்களுக்கு வாக்களித்த மக்களின் நிலைமை எந்தளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றது..?

இந்தப் பிரதேசத்தில் கடந்த 25 வருடங்களுக்க மேலாக மக்களின் முக்கிய தேவை ஒன்றிருக்கிறது. காத்தான்குடியையும் பாலமுனையையும் கர்பலா கிராமத்தின் ஊடாக இணைக்கும் வீதி முறையாக அமைக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தேவையாகும். இந்தப் பாலமுனை மக்களின் வாக்குகளைப் பெற்று இது வரைஅதிகாரத்தில் இருக்கும் எவரும் அதனைச் செய்ய வில்லை. ஓவ்வொரு தேர்தல்களிலும் வாக்குகளைச் சேகரிப்பதற்கானஅரசியல் மூலதனமாகவே அது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான காணி இங்கு இருந்ததனால், அதற்கு செல்வதற்கான கொங்கிறீற் வீதி உனடியாக அமைக்கப்பட்டது. பொது மக்களின் பணத்திலுருந்து பல மில்லியன் ரூபாய்களை செலவழித்து அவ்வீதியை அமைத்ததன் காரணமாக,  பெறுமதியற்றிருந்த அக்காணியை பல கோடி ரூபா பெறுமதியானதாக மாற்றி அதனை விற்று பணத்தையும் அந்த அரசியல்வாதி பெற்றுக்கொண்டு விட்டார். ஆனால் மக்களின் பிரச்சினை மாத்திரம் தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இப்படி இந்தப் பிரதேசங்களில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஆக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாகஅரசியல் வாதிகளின் பொருளாதாரத்தை உயர்துவதாகவே நமது அரசியல் காணப்படுகிறது என்பதனையே இது நிரூபிக்கின்றது.

எனவேதான், தேசிய மட்டத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருப்பது போலவே நமது சமூக மட்டத்திலும் அரசியல் முறையில் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில், அரசியலை வைத்து நடாத்தப்படும் தனிநபர் பிழைப்பு ஒழிக்கப்பட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்ற, முழுக்க முழுக்க மக்களின் நலன்களை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்படுகின்ற புதிய அரசியல் முறை ஒன்றை சமூகத்தில் ஏற்படுத்துவதற்காகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உழைத்துக் கொண்டிருக்கிறது. இதுவே நமது மக்கள் அனுபவித்து வரும் அரசியல் ரீதியான சுரண்டல்களுக்கம் துயரங்களுக்குமீன சிறந்த தீர்வாகும் என நாம் நம்புகின்றோம்.’

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பாலமுனை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஜவாத் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி, அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் Dr. ILM. றிபாஸ் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Published by

One response to “‘முஸ்லிம் சமூகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை நிகழத்த வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றது’: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்”

  1. “oru thevaiyyumillai. Neenga vayaipp_hikkendu irunthaal poathum”

Leave a comment