கொழும்பு: நூறு நாள் வேலைத்திட்டத்துடன் எதிர்க் கட்சிப் பொது முன்னணி ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொண்டுள்ளது. அமுலில் உள்ள அரசியலமைப்பின் தயவிலேயே பாராளுமன்றத்தில் பெரும் பான்மை கொண்டுள்ள ஒரு ஆட்சியை “மைத்திரி” குழுமத்தினால் மாற்ற முடிந்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் இதுவரை பெரும்பான்மையினை நிரூபிக்க கவிழ்க்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் உறுப்பினர்களையே கவர்ந்திழுக்க வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு இருக்கிறது.
முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக காணப்படும் வரை கடந்த அரசில் இருந்து புதிய அரசுக்கு ஆதரவளிக்க வருவோர் அனைவரும் நிராபராதிகள் என்ற அடிப்படயிலேயே “மைத்ரி” அரசு அவர்களை உள்வாங்குகிறது.
அதேவேளை, புதிதாக உள்வங்கப்படுவோருக்கு பதவிகள் வழங்குவதில்லை என போடப்பட்டுள்ள நிபந்தனையும், தராதரம் பார்க்காது கடந்தகால ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்த முறையீடுகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற தெளிவான நிலைப்பாடும் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை மைத்ரி அரசை மயிரிழையில் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அவ்வாறு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிடின் மாற்றப்படவேண்டும் என நாம் கங்கணம் கட்டியுள்ள ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகித்து பாராளுமன்ற அமர்வுகளை மூன்று மாதங்களுக்கு ஒத்திப் போடல் வேண்டும், அல்லது கலைத்துவிட்டு காபந்து அரசின் கீழ் தேர்தல் நடாத்த வேண்டும்.
இந்த இரண்டு நிலையிலும் நூறு நாள் வேலைத்திட்டம் கைவிடப்படல் தவிர்க்க முடியாத அம்சமாகும், அவற்றை கைவிட்டுவிட்டு பொதுத் தேர்தலுக்கு மைத்திரி அரசு சென்றால் தேசமும் மக்களும் சிறுபான்மை சமூகங்களும், எத்ரிகால சந்ததியினரும் வேண்டுகின்ற குறைந்த பட்ச நல்லாட்சி கட்டமைப்புக்களையாவது தோற்றுவிக்க முடியாமல் போகும்.
இவ்வாறான ஒரு நிலையில் குறைந்த தீமையை தெரிவு செய்து கொள்வதனை மைத்திரி அரசும் மக்களும் சீரணித்துக் கொள்ள வேண்டும், அந்த வகையில் தற்போதைய நிலையில் உள்வங்கப்படுவோரினது கோப்புக்களை சிறிது காலம் கிடப்பில் போட்டுவிட்டு நூறு நாள் வேலைத்திட்டத்தில் இயன்றவற்றை இயன்றவரை சாதித்துக் கொள்ள எல்லோரும் புரிந்துணர்வுடன் வழி விடல் வேண்டும்.
உதாரணமாக அரசியலமைப்பின் மீது கொண்டுவரப்பட்ட 18 சீர்திருத்தத்தை வலிதற்றதாக்கி சுயாதீன ஆணைக்குழுக்களை தோற்றுவித்தல், புதிய வரவுசெலவு திட்டத்தை கொண்டுவந்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலாவணியை குறைத்தல் என இன்னோரன்ன விடயங்களை செய்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று ஜனாநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து பதவியிழந்த மஹிந்த அரசிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு புதிய மைத்திரி அரசின் வேலைத்திட்டங்கள் குறித்த தெளிவு பிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட அவகாசம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
அடுத்து இடம் பெரும் பாராளுமனர்த் தேர்தலில் தான் மக்கள் மைத்திரி யுகத்திற்கு பொருத்தமான நல்லாட்சி விழுமியங்களை மதிக்கின்ற யுக புருஷர்களை தெரிவு செய்து கொள்ளமுடியும். தண்டிக்கப்பட வேண்டியவர்களை மக்கள் மன்றம் முன் கொண்டுவர முடியும்.
ஏற்கனவே சூறையாடப்பட்ட செல்வங்களை விட இந்த முழு தேசமும் அதன் எதிர்காலமும் சகல சமூகங்களும் அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கப்படல் முன்னுரிமைப் படுத்தப் படல் வேண்டும்.
என்றாலும் தவிர்க்கப்படவேண்டிய மற்றும் தண்டிக்கப்படவேண்டிய பிரதான புள்ளிகளை மைத்திரி அணி அரவணைக்கப்போவதில்லை என்ற உண்மையினையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
குறுகிய கட்சி தேர்தல் இன மத மொழி காழ்ப்புணர்வு அரசியலுக்கு அப்பால் சகலரையும் மைத்ரியுடன் அரவணைக்க சந்தர்ப்பம் வழங்காவிடின் எமது கனவுகள் எல்லாம் கானல் ஆகிப்போகும்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத் போன்றோரும், மலையாக தமிழர்களை பொறுத்தவரை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமான் குழுவினரும், வடகிழக்கு தமிழரை பொறுத்தவரை டக்லஸ் தேவானந்தா போன்றவர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியை பொறுத்தவரை அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உள்வாங்கப்படுவதை எதிர்த்து நிற்பது ஆரோக்கியமான அரசியலாகாது.
இன்ஷா அல்லாஹ், அத்தகைய புரிதல்களுடன் எதிர்வரும் மூன்று மாதங்களையும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் சகல சமூகங்களும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின் மிகச் சிறந்த நல்லாட்சிக் கட்டமைப்பிற்குள் உறுதியான மிகச் சிறந்த ஆட்சி இடம் பெரும் என்பதனை நாம் எல்லோரும் மனதில் கொண்டு பொதுசன அபிப்பிராயத்தை விழிப்புணர்வை ஏற்படுத்தல் வேண்டும்.
இதனை எழுதுகின்ற நானும் வாசிக்கின்ற நீங்களும், விமர்சிக்கப்படுகின்ற அரசியல் வாதிகளும் இல்லாத ஒரு யுகத்தில் முகங்களுக்கும் முகாம்களுக்கும் அப்பால் எதிர்கால சந்ததியினருக்காவது அழகிய ஒரு ஆட்சி முறையை நாம் விட்டுச் செல்வதில் கவனம் செலுத்துவோம்.
தயவு செய்து நண்பர்களுடன் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்..
Published by

Leave a comment