மஹிந்த, பசில், கோத்தபாய உட்பட பலருக்கு லஞ்ச ஊழல் விசாரணை

mahindaகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக லஞ்ச மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி. இந்த முறைப்பாட்டை இன்று செய்துள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் அரச சொத்துக்களை வீணாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாமல் ராஜபக்சவின் கார்ல்டன் சுப்பர் ஸ்போட்ஸ் நிறுவனம் சுற்றுலா சபையின் தலைவர் சேனங்க குணரத்ன சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜெனிபர் தேசிய லொத்தர் சபையின் தலைவர் மற்றும் முன்னாள் சமுர்த்தி பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊழல்களில் ஈடுபட்டவர்களும் குடும்பத்தினரும் பெருமளவில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஏனையோரும் வெளிநாடுகளுக்கு செல்லாமல் தடுக்கும் நோக்கிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹேரத் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் ஹேரத் தெரிவித்துள்ளார்

Published by

Leave a comment