சுதந்திரக் கட்சியின் தலைவர் மகிந்தவா- மைத்திரியா?

mahinda maithiriகொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மகிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்று மத்திய குழு உறுப்பினர்கள் 42 பேர் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியில் அண்மையில் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றிருந்த அனுர பிரியதர்ஷன யாப்பா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஆனால்,இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனக்க பண்டார தென்னக்கோன், சரத் அமுனுகம, எஸ்.பி. நாவின்ன, விஜித் விஜதமுனி சொய்ஸா, ரெஜினோல்ட் குரே, அதாவுத செனவிரட்ண உள்ளிட்டவர்களும் வடமேல் மாகாணசபை முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் அடங்குகின்றனர்.

mahinda maithiri

முப்பதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். துணை அமைச்சர்களான சனத் ஜயசூரிய, சுதந்திரக் கட்சியின் உபதலைவராக இருந்த கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்டோரும் மைத்திரி அணியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது

சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே கட்சியின் தலைவராக நியமித்துள்ளதாக கொழும்பில் இன்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட குழுவினர் தெரிவித்தனர். கட்சியின் செயலாளர், பொருளாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவினர் கூறினர்.

ஆனால், மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக நியமிக்கப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்றும் தமது செயற்குழு தீர்மானித்துள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான செயற்குழு கூட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment