காத்தான்குடி: புதிய கூட்டரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாசின் தலைமையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடட்டுள்ளபடி, ஜனாதிபதி மைத்திரி அரசாங்கம் 25 அமைச்சர்களையே நியமிக்கும் என்ற கடமைப்பாடும் மைத்திரி தரப்புக்கு இருக்கின்றது.
எனினும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதிர்தரப்பிலிருந்து மேலும் சில அரசியல்வாதிகளை உள்வாங்க வேண்டிய நிலையில் மைத்திரி தரப்பு இருக்கின்ற இந்நிலையில்,
1989ம் ஆண்டிலிருந்து காத்தான்குடியின் “மண்ணின் மைந்தன்” என அழைக்கப்பட்டு வந்த ஆலிம் முகம்மது ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல், தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக காத்தான்குடியில் பெரும்பாலானவர்கள் கதைப்பதை மிகத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
‘அபிவிருத்தி’ என்ற ஒன்றை மாத்திரம் காத்தான்குடி மக்களுக்குக் காண்பித்துவிட்டு, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் ஆலிம் முகம்மது ஹிஸ்புல்லாஹ்வின் கடந்த கால அரசியல் கலாச்சாரம் காத்தான்குடியில் திணிக்கப்பட்டு வந்தது.
எப்போதும் தனக்கென்று சில தோழர்களை தனது அலுவலகத்திலும், போகும் வரும் இடங்களிலும் கூட்டிச் செல்லும் நிலை ஹிஸ்புல்லாஹ்வின் அரசியலில் அண்மைக்காலமாக இருந்துவரும் புதிய பரிமாணமாகும்.
உலமா சபை, சம்மேளனம் சுயமாக இயங்க முடியாத நிலை இவரின் அரசியலில் காணப்பட்ட மிகப்பெரிய சரித்திரங்களாக அமைவதாகவும், சில பாடசாலை அதிபர்களையும், ஆசிரியர்கள் சிலரையும், குறைந்த ஊதியம் பெறும் சில அரசாங்க உத்தியோகத்தர்களையும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் எனவும் காத்தான்குடி மக்கள் பகிரங்கமாக கதைக்கும் அளவுக்கு இன்றைய காத்தான்குடி அரசியல் களம் இருக்கின்றது.
கடந்த 9ம் திகதி அதிகாலையில் ஊரைவிட்டுச் சென்றுள்ள ஹிஸ்புல்லாஹ், தற்பொழுது கொழும்பில் மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு தனது நெருங்கிய அரசியல் பிரமுகர்களை நாடுவதாகவும், இதன் பலனாகவும், புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நெருக்கடியாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரி தரப்புக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் அவசியம் இருப்பதாலும் ஹிஸ்புல்லாஹ் புதிய அரசாங்கத்தில் இணைவதில் சிக்கல்கள் இருக்கப்போவதில்லை எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அமைச்சராகவோ பிரதியமைச்சராகவோ ஒரு போதும் உள்வாங்கப்பட மாட்டார் எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலேயே மேலதிக தகவல்கள் தெரிய வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறிருக்க, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, ஹிஸ்புல்லாஹ் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவாரானால், ஹிஸ்புல்லாஹ்வின் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பது பலத்த கேள்விகளுக்கு உள்ளாகி இருக்கின்றன.
ஹிஸ்புல்லாஹ், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என இதுவரை இரண்டுபட்டிருந்த காத்தான்குடியின் பிரதான அரசியல் களத்தில், தற்பொழுது சிப்லி பாரூக் தலைமையில் மேலும் ஓர் அரசியல் எழுச்சி காத்தான்குடியில் ஏற்பட்டுள்ளது.
1989 இல் இருந்து ஏதாவதொரு அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கி தனது கொள்கைகைய காத்தான்குடியில் நிலைநாட்டிவரும் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர், மஹிந்தவின் தோல்வியால் செய்வதறியாது தடுமாறும் இத்தருணத்தில், தொடர்ந்தும் மௌலவி தரப்பு ஆலிம் முகம்மது ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு வழங்குமா அல்லது, சேகுதாவூத் பசீருக்கு ஆதரவு வழங்குமா அல்லது வேறு எவரையாவது புதிதாக ஆதரிக்குமா என்ற கேள்வியும் எழாமலில்லை.
ஆனால் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினரின் வாக்குப் பலம் தற்பொழுது சரிந்துள்ளமை மற்றுமொரு அம்சமாகும். ஏனெனில் இம்முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரியின் ஆட்சியை விரும்பிய பல முஹிப்பீன்களும் மௌலவி தரப்பில் இருந்தனர். இதனால்தான் அவசரமாக மௌலவி அப்துர் ரஊப், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர், தலம்பியிருந்த தனது ஆதரவாளர்களை ஒன்றிணைக்க அவசர தேர்தல் உரை ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
பணம் பெறுவதற்கும், புத்தகப்பைகளைப் பெறுவதற்கும் வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களை நம்பி, ஹிஸ்புல்லாஹ் தனக்கு என்றும்போல் இக்காத்தன்குடியில் ஆதரவுகள் இருக்கும் என்று இறுதிவரை நம்பியிருந்தார்.
ஆனால் இறுதிக்கட்ட அவரது அரசியல் ‘அதிகார’த்தைக் கையிலெடுத்ததால் மக்கள் மனங்களை ஹிஸ்புல்லாஹ்வால் வெல்ல முடியவில்லை.
மௌலவி அப்துர் ரஊபின் ஆதரவாளர்களையும் சேர்த்து சுமார் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க வெற்றிலைச் சின்னத்திற்கு காத்தான்குடி பிரதேசத்தில் மக்கள் வாக்களித்திருந்தனர்.
“காத்தான்குடியின் தேர்தல் களம்” எனும் ‘யுவர் காத்தான்குடி’யில் பிரசுரிக்கப்பட்ட தேர்தல் விசேட கட்டுரையில் கூறப்பட்டுள்ளது போன்று, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அமைதியாக இருந்து தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் புதிய அரசியல் திருப்பம் பொறியியலாளர் சிப்லி பாரூக் ஆகிய பிரதான அரசியல் ஆதரவாளர்களின் முன்னால் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் எவ்வாறு மீண்டும் காத்தான்குடியில் கால்பதிக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கின்றது.
வழமையாக ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தல் பிரச்சார மேடைகளிலும் ‘இம்முறை எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்’ என மக்களிடம் கோரும் ஹிஸ்புல்லாஹ்வின் இதே கோரிக்கையை காத்தான்குடி மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்வார்களா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Published by




![abdur-rauff-misbahi1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/abdur-rauff-misbahi11.jpg?w=200&h=150)


Leave a reply to Pukka Sahib Cancel reply