கொழும்பு: நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் 7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவு பெற்றது.
மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
நாடு பூராகவுமுள்ள 12314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் தமது பிரச்சார நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தது.
அந்தவகையில் வட மாகாணத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் தின செயற்பாடுகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அஸ்மின் அய்யூப் அவர்களின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண மாவட்டம்: காலை வேளையில் வாக்களிப்பு வீதம் மந்தகதியிலேயே காணப்பட்டது. இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்பில் பிழையான பிரச்சாரங்கள் மேற்கொண்டு தமிழ் மக்கள் இத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என ஒரு சிறு குழுவினர் பிரச்சாரங்களை முன்னெடுத்து இருந்தபோதிலும் அங்கு 55% த்திற்கும் அதிகமான வாக்குப் பதிவு அளிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 450132 ஆகும்.
கிளிநொச்சி மாவட்டம்: கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு வாக்களிப்பு விறுவிறுப்பாக இடம்பெறாவிட்டாலும் அங்கு பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 79093 வாக்காளர்களில் 55% அளவில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தலையீடுகள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாக மக்கள் வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்துகொள்வதில் தாமதத்தை ஏற்படுத்தியது.
முல்லைத்தீவு மாவட்டம்: முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் திருப்திப்படும் வகையில் அமைந்திருந்தன. முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் வாக்காளர்களும் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஸ் வண்டிகள் மூலம் வந்து வாக்களிப்பில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 63920 ஆகும். இங்கு 70% மான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா மாவட்டம்: வவுனியா மாவட்டத்தில் எல்லாப் பிரதேசங்களிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் இல்லாத காரணத்தினால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டனர். இங்கு பதிவு செய்யப்பட்ட 109705 வாக்காளர்களில் 65% மானோர் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டம்: மன்னார் மாவட்டத்தின் வாக்குப் பதிவுகளும் சிறந்த முறையில் இடம்பெற்றன. அங்கு வாக்குப் பதிவு 65% மாகக் காணப்பட்டது. இங்கு பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்கள் 79433 பேர். இவர்களில் 12000 பேர் இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் இவர்கள் வாக்களிக்கும் வகையில் விஷேட பஸ் போக்குவரத்துக்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தின் சில வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் ஒட்டுமொத்த வாக்களிப்பு 55%திற்கும் 65%திற்கும் இடைப்பட்டதாக காணப்படுகின்றது. இங்கு பதிவு செய்யப்பட்ட 782283 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர் என அங்குள்ள நிலைமைகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் குறிப்பிட்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்களிப்பு 60%மாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய காங்கேயனோடை, பாலமுனை, ஒல்லிக்குளம் உள்ளிட்ட பிரதேசங்களின் வாக்களிப்பு வீதம் 75% தாகக் காணப்படுகின்றது.
அத்துடன் இதர மாவட்டங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்டம் 70%, நுவரெலியா மாவட்டம் 80%, மாத்தறை மாவட்டம் 73%, கண்டி மாவட்டம் 75%, ஹம்பாந்தோட்டை மாவட்டம் 70%, பதுளை மாவட்டம் 70%, இரத்தினபுரி மாவட்டம் 70%, களுத்தறை மாவட்டம் 70%, கம்பகா மாவட்டம் 65%, அனுராதபுரம் மாவட்டம் 76%, மொனராகலை மாவட்டம் 75%, பொலன்னறுவை மாவட்டம் 75% மற்றும் கேகாலை மாவட்டம் 70% மாகவும் காணப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
Published by


Leave a comment