மட்டக்களப்பு: நடைபெறவிருக்கும் தேர்தலின் போது கண்காணிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டோர் அவதானிப்பாளர்களாக இருப்பதுடன் தேர்தல் சட்டங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். நீதியானதும், சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களது அபிலாசைகளாக இருப்பதால் தேர்தல் சட்டங்களை தெரிந்து கொண்டு செயற்படுவோம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பு பணியினைச் செய்யும் ‘பவ்fரல்’ நிறுவனத்தின் அங்கீகாரத்துடன் மட்டக்களப்பு சர்வோதய இயக்கத்தின் மாகாண இணைப்பாளர் அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளவர்களுக்கான பயிற்சி 06.01.2015 இன்று சர்வோதய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, ‘தேர்தல் சட்டமும், அடிப்படை உரிமையும்’ எனும் தலைப்பில் விரிவுரையாற்றிய அஸீஸ் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
ஒரு நாட்டில் தனி மனிதன் ஒருவனுக்கு வழங்கப்படுகின்ற கௌரவமும், மனட்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரமும் ஒரு வாக்களிப்பின் போது கிடைக்கிறது. ஒரு புள்ளடியின் மூலமே தனது அபிப்பிராயத்தை தெரிவிக்க முடியும். ஆனால் கள்ள வாக்குப் போடுதல், கள்ள வாக்குப் போடுவதற்கு உடந்தையாகயிருத்தல், தண்டணைக்குரிய குற்றமாகும்.
உயிரோடு இருக்கும் அல்லது இறந்து விட்ட ஒருவருக்காக இன்னொருவர் வாக்குப் போடுதலை ஆள்மாறட்டம் என்ற குற்றச்சாட்டில் உள்ளடக்கலாம். இக்குற்றங்களுக்கு பிடிவிறாந்து இன்றி பொலிசார் கைது செய்ய முடியும். தேர்தல் தினத்தன்று வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு இரந்து கேட்டல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிக்க முடியும். அத்துடன் போட்டியிடும் வேட்பாளர்களின் துண்டுப் பிரசுரம், சின்னம், புகைப்படம் என்பவற்றை விநியோகித்தல் போன்ற காரியங்களை தேர்தல் தினத்தன்று செய்தல் கூடாது.
வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்குச் சீட்டினை மோசடியாக அதனை ஊறுசெய்தல் அல்லது அழித்தல் தெரிவத்தாட்சி உத்தியோகத்தருக்கு போலி வேட்பு மனுவைக் கொடுத்தல், உரிய அதிகாரமளிப்பட்ட வாக்குச் சீட்டைத் தவிர வேறு எதையாவது வாக்குப் பெட்டியினுள் போடுதல், வெளியே எடுத்துச் செல்லுதல் என்பன தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும்.
ஒரு பிரதேசத்திலுள்ள வாக்கெடுப்பு நிலைய எல்லைக்குள் அல்லது வாக்களிப்பு நிலையத்தை நோக்கி வருவோருக்கு இடையூறாக எவரும் நடந்து கொள்ளக்கூடாது. அத்துடன் கடமையில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு அல்லது ஏனையோரின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் விதத்தில் ஒலி பெருக்கிகளை உயயோகித்தல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யப்படுமாகவிருந்தால் இதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு பொலிசாரின் பலப் பிரயோகம் செய்வதற்கு 1981ம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது சர்வோதய மாவட்ட இணைப்பாளர் திரு. மதன் அவர்களின் இணைப்பாக்கத்தில் பல்வேறு பரிவுகளைச் சேர்ந்த நிலையிருப்பான அவதானிப்பாளர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment