இரத்தினபுரி: இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுல்ல நகரில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டம் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறுகின்றார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கும் தகவல்களின்படி, ஏனைய சந்தேகநபர்களையும் கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன, இவ்வாறான தாக்குதல்கள் மூலம் தனது வெற்றியைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதனிடையே, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்த வடமேல் மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் வெண்டருவவின் இல்லம் மீது துப்பாக்கிச்சுடு நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர்கள்
குருநாகலில் உள்ள அவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறிய பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, துப்பாக்கிச்சூட்டில் மாகாணசபை உறுப்பினரின் பாதுகாவலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தாக்குதலை நடத்தியவர்கள் வேனொன்றில் தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
Leave a comment