கஹடோவிட்ட: இந்த நாட்டில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஆட்சி மாற்றத்துக்கு விருப்பம் கொண்டுள்ள நிலையில் இந்த சர்வாதிகார ஜனாதிபதியினை தோல்வியடையச் செய்து மைத்திரியின் ஆட்சியினை ஏற்படுத்தவே இம்மக்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர், முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
அத்தனகல்ல கஹடோவிட்ட பிரதேசத்தில் ஜனாதிபதி பொது வேட்பளார் மைததிரிபால சிறிசேனவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறியதாவது,
இந்த நாட்டை இனிமேலும் இன ரீதியாக துண்டாடுவதற்கு எவருக்கும் இடம் கொடுக்க முடியாது. இந்த நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இந்த சமாதானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சமாதானத்தை இன்று மக்கள் அனுபவிக்க முடியாத நிலையினை அரசு ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த 9 வருடங்களாக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் அரசுடன் இருந்துள்ளேன். அப்போது இந்த அரசாங்கத்துக்கு நல்லவன். எமது மக்களுக்கு பிரச்சினைகள் வருகின்ற போது அது தொடர்பில் அரசுக்குள் பேசிய போது என்னுடன் முரண்பட்டார் ஜனாதிபதி. இந்த மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினோம். அது செவிடன் காதில் ஊதிய சங்கை போன்று பொருட்படுத்தமால் போனார்.
தம்புள்ள முதல் கிரரேண்ட்பாஸ் மற்றும் இன்னோரன்ன மோசமான தாக்குதல்கள் தொடர்பிலும் நான் முன்னர் வகித்த அமைச்சுக்குள் புகுந்து எனது பணிகளுக்கு இடையூறு செய்தவர்கள் தொடர்பில் போதுமான ஆதாரங்களை கொடுத்த போதும் இன்னும் அந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவில்லை. இது தான் இந்த நாட்டின் சட்டமாகும்.
தொடர்ந்து இந்த ஜனாதிபதி ஆட்சியில் இருந்தால் இதைவிட மிகவும் மோசமான விளைவுகளை எமது மக்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தான் தொடர்ந்தும் இந்த தேர்தலில் வெற்றிக் கொள்ள என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையினையும் செய்து வெற்றிபெறுவதாக கூறிவருகின்றார். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் காலை நேரகாலத்துடன் சென்று உங்களது வாக்குகளை நல்லாட்சிக்கும், அச்சமற்ற நேர்மையான ஆட்சியொன்றை தருவதற்கு போராடும் ஜனாதிபதி வேட்பளார் மைத்திரிபால சிறிசேன அவர்களின் அன்னச் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றும் றிசாத் பதியுதீன் கேட்டுக் கொண்டார்.
Published by

Leave a comment