புத்தளத்தில் புத்திஜீவிகள் மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கண்டிக்கின்றது

NFGG– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கொழும்பு: புத்தளத்தில் கடந்த இரு தினங்களாக அரச தரப்பினால் புத்திஜீவிகள் மீது மேற்கொண்டுவரும்அடாவடித்தனங்களையும் தாக்குதல்களையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

இன்று முழு நாடுமே மாற்றமொன்றை வேண்டி நிற்கின்றது. இந்த மாற்றம் நாட்டில் மீண்டும் ஜனநாயகம், நீதி, சமூகங்களுக்கடையே நல்லிணக்கமான வாழ்வு என்பவற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்று அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்த பயணத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இணைந்து முற்போக்கான மாற்றங்களை இந்த நாட்டில் ஏற்படுத்த உழைத்து வருகின்றது.

இவ்வாறான மாற்றம் ஒன்றை வேண்டி புத்தளம் நகர முஸ்லிம்களும் குறிப்பாக புத்திஜீவிகளும் முன்வந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றனர். கடந்த இரு தினங்களாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் முழுமையாக பங்குகொள்ள வேண்டும் என்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். இந்த விடயத்தை முழுமையாக தடுத்து மக்களை வாக்களிப்பில் பங்குகொள்வதை தடுக்கும் முயற்சியையே அரச தரப்பு மேற்கொண்டிருக்கின்றது. இது பாரிய ஜனநாயக விரோத செயலாகும். அடிப்படை உரிமை மீறலாகும். இந்த அடாவடித்தனங்களையும் தாக்குதலையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிப்பதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றது.

மேற்படி புத்திஜீவிகள் மீதான தாக்குதல்களில் புத்தள நகர பிதா பாயிஸ் அவர்கள் நேரடியாகப்பங்குபற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment