‘தீர்மானம் எடுத்து விட்ட மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் எதற்க்காக?’: ஏறாவூரில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

rahumanNFGG ஊடகப்பிரிவு

ஏறாவூர்: ‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் தெளிவான தீர்மானத்துடன் இருக்கிறார்கள். அப்படியென்றால் இம்மக்கள் மத்தியில் பரவலான தேர்தல் பிரச்சாரங்களை நடாத்த வேண்டிய தேவை ஏன் இருக்கிறது..?’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

நேற்று (03.01.2015) ஏறாவூரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஏறாவூர் பிரதேச அமைப்பாளர் சகோதரர் கியாஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் நடாத்தப்பட்ட இப்பிரச்சாரக்கூட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூண ரணதுங்க அவர்களும் இன்னும் பல முக்கிய பேச்சாளர்களும் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய அப்துர் ரஹ்மான் மேலும்தெரிவித்ததாவது..

‘கடந்த காலங்களில் நாம் பல்வேறு தேர்தல்களை சந்தித்திருந்தாலும் பல வகைகிளில் முக்கிய ஒரு தேர்தலாக இது மாறியிருக்கிறது. பொதுவாக அரசியல் விடயங்களில் தம்மை வழிகாட்டுவார்கள் என மக்கள் தலைவர்களை நம்பியிருந்த நிலை மாறி, தலைவர்களை வழி நடாத்தக்கூடிய அளவு மக்கள் இத்தேர்தலில் தெளிவாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள்.

மட்டுமின்றி, தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இதில் எடுக்க வேண்டிய தீர்மானத்தையும் மக்கள் எடுத்து விட்டார்கள். அப்படியென்றால் இத்தனை தூரம் தெளிவாகவும் தீர்மானத்தோடும் இருக்கின்ற மக்கள் மத்தியில் ஏன் தேர்தல் பிரச்சாரங்கள் அவசியப்படுகின்றன என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.

இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியும்.

தன் உடலில் அசதியையும் வேதனையையும் உணர்கின்ற ஒருவன் தனக்கு ஏதோ வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதனை புரிந்து கொள்வான். அதற்கான நிவாரணம் வேண்டும் என்பதனையும் புரிந்து கொள்வான். ஆனால் அவனின் உடல் வேதனைக்கான காரணம் என்ன வென்பதனை அந்த நோயைப்பற்றி தெரிந்த வைத்தியர்தான் தெளிவு படுத்த வேண்டும்.

அது போலவே கடந்த 5 வருடங்களில் இந்த ஜனாதிபதியின் கீழ் நடந்த ஆட்சியின் வேதனையினை நாட்டின் சகலமக்களும் உணரத் தொடங்கி விட்டனர்.

பொருளாதாரக் கஸ்டம், அநீதியான நிர்வாகம், பாரபட்சம், தமதுஅடிப்படை மத உரிமைகளைக்கூட அனுபவிக்க முடியாதநிலை என்ற பல் வகையான வேதனைகளை மக்கள் இப்போது உணர்கின்றனர்.

இதற்கான தீர்வு ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலமே கிடைக்கும் என்றும் தீர்மானித்து விட்டனர். இருந்தாலும் எமது மக்களில் மிகப் பெரும்பாலானோருக்கு இந்த ஆட்சியில் நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கான காரணம் என்னவென்பதற்கான தெளிவு இன்னும் இல்லை.

நாட்டில் தலைவிரித்த்தாடும் ஊழல் மோசடிகளும், வீண் விரயங்களுமே நமது மக்கள் அனுபவிக்கும் பொருளாதார சுமைகளுக்கும் கஸ்டங்களுக்கும் காரணமாகும். நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கின் சீர்குலைவுகளே நமது மத உரிமைகள் மீதான அடக்கு முறைகளுக்கு காரணமாகும்.

அரசியல் தலையீடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களுமே நாட்டில் நிலவும் பாரபட்சமான நிர்வாகத்திற்குக் காரணமாகும். இந்த அரசாங்கத்தின் பிழையான பொருளாதாரக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையுமே நம் நாடு மீள முடியாத கடன் சுமையில் சிக்கியிருப்பதற்கான காரணமாகும்.

தேர்தல் தீர்மானங்களை வாக்காளர்கள் அறிவுபூர்வமாகவன்றி உணர்ச்சிபூர்வமாக மேற்கொள்வதே இலங்கையின் அரசியல் சீரழிவுக்கான மிக அடிப்படைக் காரணமாகும்.

இந்நாட்டில் நிலவும் மக்களுக்கு விரோதமான ஆட்சியினை மாற்றி ஒரு நல்லாட்சியினை தொடக்கி வைக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான மிக அடிப்படை அவசியம் மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சியும் அறிவு பூர்வமான அரசியல் தீர்மானங்களுமாகும்.

எனவே தான் இந்தத் தேர்தல் தொடர்பில் மக்கள் தெளிவான தீர்மானங்களோடு இருந்தாலும் கூட,  அந்தத் தீர்மானம் உணர்வு பூர்வமானதாக அன்றி அறிவுபூர்வமானதாக மாற்றப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானங்களுடன் மக்கள் இருந்தாலும் கூட,  அவர்கள் மத்தியில் நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கான காரணங்ளை தெளிவுபடுத்தி, அரசியல் ரீதியாக அறிவூட்டி, அவர்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானங்கள் அறிவு பூர்வமானவையாக மாற்றப்பட வேண்டும்.

இந்த அடிப்படையிலேயே நல்லாட்சிக்கான தேசிய முன்னிணி ஆகிய நாம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக மக்களுக்கு அரசியல் அறிவூட்டும் ‘புதிய நாளை’ என்ற பத்திரிகை ஒன்றினை அச்சிட்டு நாம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகித்து வருகிறோம். அதில் ஏராளமான தகவல்களையும் புள்ளி விபரங்களையும் அறிவு பூர்வமான வாதங்களையும் முன்வைத்திருக்கிறோம்.

இதனை நீங்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டும். ஏன் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதனை தகவல்களோடு தெரிந்து கொண்டு, நாம் மேற்கொண்டிருக்கும் ஆட்சி மாற்றத்திற்கான தீர்மானங்களை அறிவு பூர்வமானதாக இன்னும் பலப்படுத்த வேண்டும்.

Published by

Leave a comment