காத்தான்குடி: காத்தான்குடியில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று (3.1.2014) காத்தான்குடியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டாக வலியுறுத்தப்பட்டது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஒன்றிணைந்து ‘தேர்தல் வன்முறைகளுக்கு எதிரான ஒருமித்த குரல்’ எனும் தொனிப் பொருளில் மேற்படி பத்திரிகையாளர் சந்திப்பினை நடாத்தியது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், MIM. முஜீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்சா, அதன் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் ULMN. முபீன், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் காத்தான்குடி அமைப்பாளர் M. முஸ்தபா, PTM. முபாரக் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது காத்தான்குடியில் இடம் பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் காத்தான்குடி நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவரும் இருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
’24 மணித்தியாலத்திற்குள் காத்தான்குடியிலிருந்தல்ல இலங்கையிலிருந்தே உங்களை துரத்துவோம்’ என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மிரட்டும் தோரணையில் கதைத்து 24 மணி நேரம் நிறைவடைவதற்குள் பிரதான வீதியிலுள்ள தன்னுடைய அலுவலகம் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிகள், கதிரைகள் போன்றவைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன, இவைகளை இங்கிருந்த பொலிசாரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள் எனக் கூறிய அவர், தன்னுடைய வீட்டுக்கும் தன்னுடன் இருக்கும் முக்கியஸ்தர்கள் வீடுகளுக்கும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையில், தேர்தல் சட்டங்களை மீறுகின்ற விடயங்கள்தான் வன்முறைகளுக்கு இட்டுச் செல்கின்றது. இதனை உடனடியாக உரியவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த வன்முறைகள் இடம்பெறும்போது பொலிசார் அசமந்தமாக நடந்துகொள்வதானது பக்கச்சார்பான தன்மையையத்தான் காட்டுகிறது. இதுதான் இந்த வன்முறைகள் தொடர்வதற்கான காரணமாகும். இவை எங்கிருந்து தொடங்குகிறது என்பதும் பொலிசாருக்குத் தெரியும், இவற்றுடன் தொடர்பு பட்டவர்கள் யார், யார் என்பதும் பொலிசாருக்குத் தெரியும். ஆனால் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் இதுவரை பொலிசாரால் கைது செய்யப்படவில்லை. கொடுக்கப்படும் முறைப்பாடுகளுக்கும் உரிய முறையில் விசாரணைகள் இல்லை, தொடர்பு பட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.
எனவே, இவ்வாறான செயல்களையும் வன்முறைச் சம்பவங்களையும் நல்லாட்சிக்கான தேசிய வன்மையாக கண்டிக்கின்றது.
அத்துடன் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக பொலிசார் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை பொது வேட்பாளரை ஆதரித்து கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அலுவலகம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அலுவலகம், போன்ற அலுவலகங்கள் முக்கியஸ்தர்களின் வீடுகள் இருக்கின்றன. இன்றிலிருந்து இவையெல்லாம் பாதுக்காக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Published by

Leave a comment