கொழும்பு: இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினையும், மத சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன் முஸ்லிம்களுக்கு நானே காவலன் என கூறிவரும் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை தொடர்ந்தேச்சையாக முனாபிக் என்று கூறிவருகின்றது தொடர்பில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் பெரும்பான்மை சிங்கள மக்களும் தமது அதிருப்தியினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக செல்கின்ற போது மேடைகளில் முனாபிக் என்ற சொல்லை சொல்லி அதற்கு கொடுக்கும் விளக்கமானது அல்லாஹ்வை நம்பாத ஒருவன் எவ்வாறு கலிமாச் சொன்ன ஒருவரை பார்த்து இவ்வாறு கூறுவதானது சர்வதேச மட்டத்தில் முஸ்லிம் நாடுகள் மஹிந்த ராஜபக்ஷவின் இன ரீதியான இஸ்லாமிய எதிர் கொள்கையினை கண்டுகொண்டுள்ளதை அறிய முடிகின்றது.
குறிப்பாக முஸ்லிம் நாடுகளின் இலங்கைத் துாதரகங்கள் இவ்விடயம் தொடர்பில் மௌனமாக இருந்த போதும், அவைகள் தமது நாடுகள் மத்தியில் இலங்கையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக அந்த அரசு பயன்படுத்தும் ஆயுதமாக இனவாத சிந்தனை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விடயம் தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தாமல் இல்லை. முனாபிக் என்றால் நயவஞ்சகன் என்ற பொருள் படுகின்றது. உள்ளொன்றினை வைத்து புறத்தே ஒன்றை பேசுபவனை இவ்வாறு கூறுவர். இந்த மஹிந்த ராஜபக்ஷவினை ஜனாதிபதியாக அரியாசனத்தில் ஒரு தடவையல்ல இரு தடவை அமர்த்தியதுடன், மூன்றாவது தடவையாகவும் அமரச்செய்ய தாமும் ஆதரவாக வாக்களித்ததை மறந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அடிப்படைவாத இனரீதியான சிந்தனைகளை உண்டுபண்ணும் கடும் போக்கு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கியவிடயம் தற்போது வெளியாகியுள்ளது.
இவ்விரண்டு விடயங்களுடன் ஒப்பீட்டு நோக்குகையில் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பது என்பது இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாத யுத்தத்தை விட இனங்களுக்கிடையிலான வெட்டு குத்துகளும், உயிர் பலிகளும் இடம் பெறுவதற்கான அடித்தளமாக இதனை பார்க்க முடியும். 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருவதற்கு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் வாழும் முஸ்லிம்கள் அகதி முகாமில் அவலத்துடன் வாழ்ந்த போதும் அந்த மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றுக்கொடுத்து ஆட்சியின் பங்காளராக முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்துள்ளார். அதன் பிற்பாடு 2010 ஆம் ஆண்டும் இம்மக்களது வாக்குகளையும் இதே மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக் கொடுத்தார். இவ்வாறு இருந்த நிலையில் தமது சமூகத்தின் அரசியல் எதிர்காலம், பாதுகாப்பு, நாட்டின் தற்போதைய அச்சுறுத்தல் என்பனவற்றை கவனத்திற் கொண்டு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கிவந்த ஆதரவை விளக்கிக் கொண்டதையடுத்து அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் வழங்கிய ஆதரவு பெரும் அளவில் குறைவடைந்துள்ளதை காணமுடிகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் நேற்று மன்னாருக்கு வருகைத்தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 7 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். இந்த உரையிலும் முனாபிக் என்னும் சொல்லை பயன்படுத்தினார். இவரது உரையினை மொழி பெயர்ப்பு செய்தவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தேச்சையாக முஸ்லிம் சமூகத்தினை அவமானப்படுத்தும் இந்த நாட்டின் தலைவர் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வகையான பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதல், மத அனுஷ்டானங்களின் மீதான தடைகள் என்பன இதற்கு நல்ல உதாரணங்களாகும்.
குறிப்பாக பொதுபலசேனா அமைப்பின் பின்னணியில் இருப்பது அரசாங்கம் என்பது உறுதியாகியுள்ள நிலையில் தொடர்ந்து இந்த அரசுக்குள் முஸ்லிம்கள் எவ்வாறு இருக்க முடியும். என்ற கேள்வி சமூகத்தில் ஏற்பட்ட போது அதற்கான பதிலினை றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் வழங்கியுள்ளனர். ஆனால் இன்று அரசாங்கத்தில் ஒட்டுண்ணி போன்று இருக்கும் சிலர் முஸ்லிம் சமூகம் சலுகைகளை வழங்கினால் சரணாகதி அடைந்து விடுவார்கள் என்று தமது சொகுசு வாழ்வுக்காக சோரம் போயுள்ளனர். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த நாட்டு பெரும்பான்மையான மக்கள் புதியதொரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த தயாராகிவிட்டனர் என்பது ஆய்வுகளில் இருந்து அறிய முடிகின்றது.
Published by

Leave a comment