இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்

police[1]கொழும்பு: தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறையை உடனடியாக மீண்டும் அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கடந்த (டிசம்பர் மாதம்) 29 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன

தெரிவித்தார். இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் பொருட்டு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது அமுலில் உள்ள சட்டத்திற்கு மேலதிகமாக

புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதுகாப்புடன் தொடர்புடைய சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலு ள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தமயந்தி ஜயரத்ன மேலும் விளக்கமளிக்கையில் :- இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் பிரஜா உரிமை பெற்று வாழ்பவர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடைமுறை ஏற்கனவே அமுலில் இருந்தது.

நாட்டில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைய இரட்டை பிரஜா உரிமையை பெற்றுக் கொள்ள விரும்பும் ஒருவர் முதலாவதாக ஐந்து ஆண்டு காலம் நிரந்தர வதிவிடத்திற்கான விஸாவை பெற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் இரட்டை பிரஜா உரிமை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும். அப்போது நாட்டில் காணப்பட்ட நிலைமையும் இதற்கு காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு முதல் இது தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும் வெளிநாட்டில் வாழும் பலர் ஜனாதிபதியிடமும், பாதுகாப்புச் செயலாளரிடமும் மீண்டும் இதனை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்துவது என்று திட்டமிடப்பட்டு அது தொடர்பான கோரிக்கைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு இம் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக தமக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல் (நேற்று) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்தது.

அத்துடன் புதிய நிர்வாக நடைமுறை களும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதற்கமைய ஏற்கனவே அமுலிலிருந்த ஐந்து ஆண்டு காலம் நிரந்தர வதிவிடத்திற்கான விஸாவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக உலகின் ஏனைய சில நாடுகளைப் போன்று இதற்கு பின்னர் நேரடியாகவே இரட்டை பிரஜா உரிமை வழங்கப்படும். ஆனால் இது தொடர்பில் இரண்டு புதிய விதிமுறைகள் கையாளப்படும். முதலாவதாக இரட்டை பிரஜா உரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தாம் தற்போது வாழும் நாட்டிலுள்ள உயர் ஸ்தானிகர் அல்லது தூதுவர் ஊடாக தாம் சட்ட ரீதியாக வெளிநாட்டில் வசித்து வருகின்றவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அவை முழுமையாக சரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டாவதாக மேற்படி இரட்டை பிரஜா உரிமையை வழங்குவதற்கு குறித்த நபர் தகுதியானவரா என்பது தொடர்பில் ஆராய அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு முன் சென்று ஆவணங்களிலுள்ள விடயங்களை நாட்டிற்குள் மீண்டும் வருவதற்கான காரணங்களையும் உரிய முறையில் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த நபருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குமாறு மேற்படி குழு பாதுகாப்புச் செயலாளருக்கு சிபாரிசு செய்யும் அந்த பெயர் பட்டியலை ஏற்றுக்கொள்ளும் அவர் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பி அனுமதியை பெற்றுக் கொள்வார். இதுவே புதிய நடைமுறையாகும் என்றார்.

எந்த கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமதி தமயந்தி ஜயரத்ன :- யுத்தத்திற்கு பின்னர் நாடு அடைந்து வரும் அபிவிருத்தி பணிகளை அனுபவித்தல், நாட்டின் பொருளாதார நலனை கருத்திற் கொண்டு முதலீடு செய்ய முன்வருதல், தொழில் ரீதியாக தான் பெற்ற கல்வித்தரத்தை பயன்படுத்தி தாய் நாட்டிற்காக அரசாங்கத்திற்காக பொது துறை ஊடாக சேவையாற்றுதல் போன்ற நோக்கில் விண்ணப்பிப்பவர்களுக்கே இந்த இரட்டை பிரஜா உரிமை வழங்கப்படும் என்றார். நாட்டிலிருந்து வெளியேறி அடைக்கலம் கோரியவர்களுக்கு இது வழங்கப்படுமா என்று மற்றமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் :-

நிச்சயம் அவ்வாறானவர்களுக்கு வழக்கப்பட மாட்டாது. ஏனெனில் அவர் எமது நாடு வாழ்வதற்கு பொருத்தமானதல்ல, துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டிற்கு எதிராகவே சென்றுள்ளார். எனவே நாட்டிற்கு எதிராக செயற்பட்டவர்கள், சட்டவிரோதமாக செல்பவர்கள் இதற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என்றார். விண்ணப்பிக்கப்படும் நாடுகளும் கொடுப்பனவுகளும் உலகிலுள்ள சுமார் 10 அல்லது 12 நாடுகளிலிருந்தே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகிறது. ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களிடம் இருந்தே விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றன. மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் வாழ்கின்றவர்கள் இது தொடர்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதில்லை என்றார். இதேவேளை, ஏற்கனவே கிடைக்கப்பெற்ற சுமார் 1500 விண்ணப்பங்கள் உள்ளதாக தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம். என். ரணசிங்க, இந்த விண்ணப்பத்திற்கு மேலதிகமாக தேவைப்படும் விபரங்களை உள்ளடக்கி அவையும் குறித்த குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

குடும்பத்தின் பிரதான குடியிருப்பாளர் 2 இலட்சம் ரூபாவும் அவரது மனைவி 50 ஆயிரம் ரூபாவும். பிள்ளை 50 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக செலுத்த வேண்டும்.

இதேவேளை, தற்பொழுது நாட்டில் சுமுகமான நிலை காணப்படுவதனாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் காலத்தில் தாம் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று முன்தினம் கூறியிருந்தது. இதுவே நல்லதொரு சான்றாகும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மையத்தின் பணிப்பாளர் பிரகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

Published by

Leave a comment