அக்குறனை: ‘இன்று அரசியலில் அதிகம் பேசப்படுகின்ற ஒன்றாக நல்லாட்சி என்கின்ற பதம் மாறியிருக்கிறது. ஆனால், மக்களின் அறிவுபூர்வமான அரசியல் விழிப்புணர்வே நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும்’ என அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
NFGGயின் அக்குறனைக் கிளையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பெண்களுக்கான பிரத்தியேக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘தற்போது நிலவும் ஆட்சிமுறை நீக்கப்பட்டு நல்லாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். அந்த விருப்பம் மைத்திரி அவர்களை வெற்றியடையச் செய்யவேண்டும் என்ற ஒரு அலையாக மாறியிருக்கிறது.
கடந்த நான்கு (4) வருடங்களாக ஜனாதிபதி மஹிந்தவினால் இந்த நாடு ஆட்சிசெய்யப்பட்டு வரும் விதமும்இ அது மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாதகங்களும் தீமைகளுமே இவ்வாறு மக்களின் உணர்வுகளைத் திரட்டியிருக்கிறது.
இந்த இடத்தில், உலகம் கண்ட மாபெரும் அறிவு மேதைகளில் ஒருவரான அல்போர்ட் ஐன்ஸ்டைன் அவர்களுடைய வார்த்தையை நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும். அவர் கூறுகின்றார்… ‘இந்த உலகம் தீமை புரிவோரால் அழிவதில்லை. அந்தத் தீமையை அகற்ற முயலாமல் மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பவர்களாலேயே இந்த உலகம் அழிகிறது’
இந்தக் கூற்று நாம் வாழும் அரசியல் சமூக சூழ்நிலைகளுக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். ஏனெனில் இந்த நாட்டில் மேலெழுந்துள்ள தனிமனித அராஜக ஆட்சி, ஊழல்மோசடி, அதிகார துஸ்பிரயோகம், அதனால் உருவாகும் சமூகத் தீமைகள் போன்ற காரணிகளே ஒரு மாற்றம் தேவை என்பதற்கான அடிப்படை நியாயங்களாகும்.
இந்தத் தீமைகளை புரிவோருக்கு எதிராக பேசுவதற்கும் அவற்றை அகற்றுவதற்கும் நாம் முயலாதவரை அவை தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலை, நாட்டையும் சமூகத்தையும் சீரழிக்கும். எனவேதான் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் எனில் மக்கள் மத்தியில் அது தொடர்பான அரசியல் விழிப்புணர்வு அவசியமாக மாறுகின்றது.
மக்களின் இந்த விழிப்புணர்வுகளை அத்திவாரமாகக் கொண்டுதான் நல்லாட்சியை கட்டி எழுப்பமுடியும். எனவேதான், எதிர்வரும் தேர்தலில் நாமெல்லோரும் நல்லாட்சியை நோக்கிய ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்கின்ற அதேவேளை அதனை எதற்காக நாம்செய்கிறோம் என்ற தெளிவோடும் அறிவோடும் வாக்களிக்க வேண்டும்.
அந்த வகையில்தான் ‘புதிய நாளை’ என்ற பத்திரிகை மூலம் மக்களை அரசியல் ரீதியாக விழிப்பூட்டுகின்ற பணியினை எமது பிரச்சார வேலைத்திட்டங்களில் பிரதானமா ஒன்றாக மேற்கொண்டு வருகிறோம்’
Published by

Leave a comment