‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது எமது நோக்கமல்ல’ – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

rahumanNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: ‘மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவது இங்கு எமது நோக்கமல்ல. ஒரு ஆட்சிமாற்றத்தின் மூலம் சிறந்த ஆட்சிமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதும் அதன் மூலம் அனைத்து மக்களும் இந்நாட்டில் சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழுவதற்கான சூழலை எற்படுத்துவதுமே எமது நோக்கமாகும்.’ என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்று (29.12.2014) காலை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்று காத்தான்குடியில் நடைபெற்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியாலாளர் சிப்லி பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்ளைபரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இப்பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது..

‘நம் நாட்டில் மாற்றத்தை வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுதான் இன்று பெரும் அலையாக திரண்டிருக்கிறது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த நாட்டை மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்த விதமும் அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் விரக்தியுமே மக்களின் இந்த உணர்வலைகளுக்கு காரணமாகும். என்னதான் அநியாயங்கள் நடந்த போதிலும் இந்த ஜனாதிபதியை தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால் இந்த ஜனாதிபதி தோற்கடிக்கப்பட வேண்டும் ஒரு புதிய ஆட்சிமுறை உருவாக வேண்டும் என்ற மக்களின் உணர்வு நாடு தழுவிய பேரலையாக மாறியிருக்கிறது.

இன்னமும் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு தமது சுகபோகங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மஹிந்தவை ஆதரிப்பதற்காக, ஏற்றுக்கொள்ள முடியாத பல காரணங்களை சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தால் அது பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் அது பாரிய ஆபத்தாக மாறும் என்றும் சொல்லித் திரிகிறார்கள்.

ஆனால் ஒன்றை அவர்கள் மறந்து விடக்கூடாது.

இந்த ஜனாதிபதி தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற வெளிப்பாடுகளை முதன் முதலில் வெளிப்படுத்தியவர்கள் ஜனாதிபதியின் சொந்த மாவட்ட மக்களான ஹம்மாந்தோட்டை பிரதேச மக்களேயாகும். நடந்து முடிந்த தென்மாகாண சபைத்தேர்தலில் அவர்கள் அந்த செய்தியை முழுநாட்டிற்கும் சொன்னார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்த போதிலும் கூட அம்மக்களின் கணிசமான ஆதரவை ஜனாதிபதி இழந்திருந்தார். அது போலவேதான் கடந்த ஊவா தேர்தலிலும் மொனராகல மாவட்ட மக்கள் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற செய்தியை சொல்லியிருந்தார்கள்.

தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்களை ஓரங்கட்டி, இனவாதத்தை ஊக்கி வளர்த்து, பௌத்த சிங்கள வாக்குகளை மட்டுமே கொண்டு தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கமுடியம் என்ற கணக்கை இந்த அரசாங்கம் போட்டது. ஆனால், அந்தக் கணக்கை இறைவன் தப்புக் கணக்காகமாற்றிவிட்டான்.

ஆட்சி மாற்றத்தை நோக்கி இப்போது இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலை இறைவன் எமக்கு ஏற்படுத்தித்தந்த ஒரு அரிய அரிய வாய்ப்பாகும். மனிதர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இறைவன் ஒரு தட்டில் வைத்து எமது கைகளில் தருவதில்லை. அந்தத் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை மாத்திரமே இறைவன் ஏற்படுத்தித் தருகிறான். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நமது கைகளில்தான் தங்கியிருக்கிறது.

எனவேதான்இ இந்த மாற்றத்திற்கான உழைப்பில் மிக நீண்டகாலமாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்து பணியாற்றி வருகிறது.

நாம் இங்கு எதிர்பார்க்கின்ற மாற்றம் என்பது மஹிந்தவை அகற்றி விட்டு மைத்திரி அவர்களை ஆட்சியில் அமர்த்துகின்ற வேலைத்திட்டம் அல்ல. மாறாக நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கான மாற்றமாகவே அது அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அனைத்து மக்களுக்குமான நல்வாழ்வை வழங்குகின்ற இந்தமாற்றத்தில் பெரும்பான்மை மக்களுக்கு ஈடாக முஸ்லிம்களாகிய நாங்களும் கௌரவமான பங்காளிகளாக மாறவேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடாகும்.’

Published by

Leave a comment