கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது. சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதனை நிரூபித்து விட்டது என அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டதுடன் வெற்றியின் பின்னர் எம்மிடமிருந்து சென்றவர்கள் மீண்டும் எம்மிடமே திரும்பி வரவேண்டிய நிலை உருவாகும். அப்போது அவர்கள் மன்னிப்பு கேட்டே வர வேண்டும் என்பதுடன் எமது நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாகவே வரவேண்டும். இதற்காக ஜனாதிபதியின் சலூன் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
தேசிய அரசாங்கமொன்றை நிறுவுவதாக மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எவருமே இதற்கு துணைபோக மாட்டார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவருமே எமது கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுவார்களே தவிர ரணிலின், மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அல்ல.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார கோஷங்கள் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரினதும் நிலைப்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகவே உள்ளன.
பரீட்சையில் பல தடவைகள் தோல்வியுற்ற ஒருவர் எப்படியாவது பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மற்றொருவரை “குதிரை ஓடுவதற்கு” நியமிப்பது போன்று 29 தடவைகள் தேர்தலில் தோல்வியுற்ற ரணில் எப்படியாவது பதவியேற்க வேண்டும் என்பதற்காக மைத்திரியை குதிரை ஓடுவதற்கு விட்டுள்ளார் என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.
Published by

Leave a comment