ஜகார்த்தா: ஞாயிற்றுக் கிழமையன்று காணமல் போன எயார் ஏசியா விமானத்தில் பயணித்த பலரின் சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த இந்த விமானம் பாதி வழியில் தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 162 பேர் பயணித்திருந்தனர்.
இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியை ஒட்டிய பகுதியில், காணமல்போன விமானத்தின் பகுதிகளைத் தேடும் குழுவினர் விமானத்தில் இருந்தபடி இந்த சடலங்களைப் பார்த்துள்ளனர். அதையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற இந்தோனேசியக் கடற்படையினர், கடலில் உப்பிப் போன நிலையில் மிதந்து கொண்டிருந்த டஜன் கணக்கான சடலங்களை மீட்டுள்ளனர்.
சடலங்கள் மீட்கப்படும் காட்சி தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதை சுரபயா விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளின் உறவினர்கள் பார்த்தவுடன் கதறி அழுதனர். ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்தப் பேரிழப்பை சந்தித்துள்ளோரின் சோகத்தை தானும் பகிந்து கொள்வதாக எயார் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸ் டுவீட் செய்துள்ளார். இறந்தோரின் சடலங்களை செய்தியில் காட்டியதற்காக தொலைக்காட்சிச் சனல்கள் தற்போது மன்னுப்புக் கோரியுள்ளன.
Published by


Leave a comment