முஸ்லிம் காங்கிரஸின் மைத்திரி ஆதரவும் பெரும்பான்மை அரசியல் உணர்வலையும்

slmc[1]I.L.M. றிபாஸ்

கொழும்பு: அரசியல் களம் தினம் தோறும் ஆச்சர்யங்களாலும் அதிர்ச்சியாலும் நிரம்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இலங்கை தேசத்திற்கான ஒரு ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் முஸ்லிம் அரசியல்தான் மிகவும் பிரபல்யமான பேசு பொருளாக மாறி இருக்கிறது. இதற்குக் காரணம் முஸ்லிம் அரசியலின் பல கூறுகள் கட்டம் கட்டமாக அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபட்டு தலைப்புச் செய்திகளாக அதிர்ச்சியூட்டிக் கொண்டிருப்பதாகும்.

முஸ்லிம்களுக்கு மத்தியல் செல்வாக்குள்ள அரசியல் சக்தியான முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்த நொடியிலிருந்து சிங்கள பேரினவாத சக்திகளின் கூச்சல் மேலோங்கத் தொடங்கி இருப்பதை எல்லா திசைகளிலும் செவியுறக் கூடியதாக இருக்கிறது. இந்தக் கூச்சல் மிக மோசமான இனவாதமாக பிரச்சாரமாக பரிணமிக்கக் கூடும் என்பதே அவதானிகளின் அபிப்பிராயமாக உள்ளது. தோல்வியை நினைத்துப் பார்ப்பதற்குக் கூட தயங்கும் ராஜபக்ஷ அரசு தேர்தல் வெற்றிக்காக என்ன விலையையும் கொடுக்க தயங்காது அது எப்படிப்பட்ட பாரதூரமான விளைவுகளாக இருந்தாலும் அதனைப் பற்றி அரசு அலட்டிக் கொள்ளப்போவதில்லை என்பது நமக்கு தெரியாத ஒன்றல்ல.

இந்நிலையில் அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சில சில்லறை முஸ்லிம் அரசியல் வாதிகளால் ராஜபக்ஷ அரசின் நிகழ்ச்சி நிரலை மாற்றும் அளவிற்கு செல்வாக்கு செலுத்தமுடியாது என்பது நிதர்சனம். ஏனெனில்  இந்த சில்லறை அரசியல்வாதிகள் அரசோடு ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களது சுயலாப அரசியல் என்பதால் சமூக வலிகளைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.

இனி வர இருக்கின்ற தினங்கள் இலங்கையின் அரசியல் களத்தை மிகுந்த கொதி நிலைக்கு கொண்டு செல்லும், தமிழ் முஸ்லிம் வாக்குகளில் நம்பிக்கை இழந்த ராஜபக்ஷ அரசு மிக தீவிரமாக இனவாதக் கருத்துக்களை சிங்கள கிராமப் புறங்களில் விதைத்து அந்த மக்களை பயங்கர வாதத்தின் அதிலும் இஸ்லாமிய பயங்கர வாதத்தின் எழுச்சி பற்றி மிக அச்சுறுத்தி,  தேசிய உணர்வு பற்றியும் சிங்கள பௌத்த  தேசத்தின் பாதுகாப்பு பற்றியும் மிகவும் பயமுறுத்தி வாக்குகளை கொள்ளையடிக்கும் முயற்சியினை முடிக்கி விட்டுள்ளது.

இந்த பிரச்சாரம் தனிச் சிங்கள கிராமப் புறங்களை மையப் படுத்தி முன்னெடுக்கப் படுகிறது. இந்த கிராமப் புற அப்பாவி சனங்களை எதிரணியினர் அணுகா வண்ணம் தடுக்கும் முயற்சிகளும் தீவிரமாக முன்னெடுக்கப் படுகின்றன. இதுவரை மௌனம் காத்துவந்த பொது பல சேனா முழுமூச்சாக இப்போது பிரச்சாரத்தில் இறக்கப் பட்டுள்ளது. இவர்களின் ஊடக அறிக்கைகளும் விசமப் பிரச்சாரங்களும் அதி தீவிரத்துடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது ஒரு அபாயகரமான சூழலை உருவாக்கி விடுவதற்கான யுக்தியாகவும் பயன் படுத்தப்படலாம்.

இவற்றைத் தாண்டி பல்லின  பலத்துடன் எழுச்சியுற்றிருக்கும் பொது எதிரணி மிக லாவகமாகவும் ராஜ தந்திரத்துடனும் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தவேண்டிய தேவை இப்போது உணரப்படுகிறது. இதற்கு கூட்டணியிலுள்ளவர்கள் ஒன்றாக சகல பிரதேசங்களுக்கும் சென்று பிரச்சார மேடைகளில் உரையாற்றுவது மட்டும் போதுமாக இருக்கப்போவதில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் வெள்ளத்தினை மாத்திரம்  வாக்கு வங்கியின் அடையாளமாக கொள்ளமுடியாது. கிராமப் புறங்களில்  ஊடுருவி பிரச்சாரம் செய்ய வேண்டிய பாரிய தேவை இன்னும் இருக்கிறது. இந்த பிரச்சார நடவடிக்கைகளுக்கு கூட்டணியின் அங்கத்தவர்கள் தமது ஆளுகைக்கு உட்பட்ட மற்றும் தம்மால் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சகல் தளங்களிலும் தமது  பிரச்சாரத்தினை  அவசரமாக திட்டமிட்டு முடிக்கி விடுவது மிகவும் இன்றியமையாததாகும். இல்லையேல் கூட்டணயின் வெற்றி பற்றிய அச்சப்பாடு முழுவதுமாக அகன்றுவிடாது.

Published by

Leave a comment