”எனக்கு இயல்பிலேயே முஸ்லிம்களைப் பிடிக்காது. நான் வாழ்ந்த சமூகத்திலிருந்து முஸ்லிம் சமூகம் தொடர்பாக நான் அறிந்தவைஇ கேட்டவை மற்றும் பார்த்தவை யாவும் முஸ்லிம்கள் மீது எனது அபிமானத்தை அதிகம் குறைத்திருந்தன. எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் முஸ்லிம்கள் பற்றிய எனது அதிருப்தியையும் வெறுப்பையும் நான் வெளியிடத் தயங்குவதில்லை.
ஊரில் முஸ்லிம்களுடன் இடம்பெறும் சிறு சிறு தகராறுகளில் நான் இடம்பெறத் தவறுவதில்லை. ஆனால் முஸ்லிம்கள் பற்றி எத்தகைய கண்ணோட்டங்கள் நிலவுகின்றன என்று இப்போதுதான் உணர்கிறேன். எனது இந்த தவறான அபிப்பிராயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டமாகும்.”
சமூகத்தில் சமயப் பன்மைத்துவம் மற்றும் பல்வகைமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கினைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்ட இப்பயிற்சியில் கலந்து கொண்ட திருகோணமலை, கந்தானையைச் சேர்ந்த தரிந்து என்ற இளைஞரே தனது அனுபவத்தை மேற்கண்டவாறு பகிர்ந்து கொண்டார்.
மத்திய, வட மத்திய, கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கள் மற்றும் இம்மாகாணங்களின் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலில் இத்திட்டத்தை இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் மேற்கொள்கின்றது.
இந்த மக்கள் அரங்கத்தின் வாயிலாக சமயப் பன்மைத்துவம் மற்றும் பல்வகைமை ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் உத்திகள் தொடர்பான நிபுணத்துவப் பயிற்சி நெறி கடந்த வாரம் நிறைவு பெற்றது.
இப்பயிற்சி நெறியில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 36 இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர். இப் பயிற்சி முடிவில் 20 அரங்கப் பிரதிகள் எழுதப்பட்டுள்ளன. இவை யாவும் பொலனறுவை, திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள 30 பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன.
சமயப் பன்மைத்துவம் என்பது இன்று அதிகரித்து வரும் சமூகத் தேவையாக உள்ளது. சமயங்களுக்கிடையிலான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமையினால் பல இடங்களில் சமூக விரிசல்கள் இடம்பெற்று வருகின்றன. சமய அடையாளங்களை முன்னிறுத்திய போட்டா போட்டி நிலை யுத்தத்திற்கு பிந்திய சமூக வாழ்வில் ஒரு சவாலாக உள்ளது. சமய விழுமியங்களை புரிந்து கொண்டு ஏற்புடமை வழங்கும் பணியில் இளைஞர்களின் ஆக்கத்திறனை உள்வாங்கிக்கொள்ளும் பல உரையாடல்கள் இப்பயிற்சி நெறியில் இடம்பெற்றன.
இளைஞர்கள் பரஸ்பரம் மிகவும் தவறான புரிதல்களைக் கொண்டிருப்பதையும் சமய வன்முறைகளை தூண்டுவதிலும் குறைப்பதிலும் அதிக பங்கு வகிப்பதை இப்பயிற்சி நெறியில் கண்டுகொள்ள முடிந்தது.
நாடகங்கள் யாவும் ஜனவரி மாதம் 15 தொடக்கம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment