ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகல்

hakeemகொழும்பு: இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை கொழும்பில் அறிவித்துள்ளது.

கட்சி எடுத்த தீர்மானத்தின்படி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்ள எடுத்த இந்த முடிவையடுத்து தனது நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் அனுப்பிவைத்துள்ளார்.

மற்றுமோர் உற்பத்தி திறன் அமைச்சரான பசீர் சேகுதாவுத்தும் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என ரவூப் ஹக்கீம் இது தொடர்பில் கூறியுள்ளார்.

hakeem

2010ம் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு ஆசனங்களைப் பெற்றிருந்தது.

பின்னர் எதிர்கட்சியிலிருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி அரசாங்கத்தில் இணைந்துகொண்டு இரு அமைச்சுக்களை பெற்றுக்கொண்டது.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அரச உயர் மட்டம் வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தன.

இருந்த போதிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளுக்கமையவே முடிவு எடுக்க வேண்டும் என கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில், அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள இந்த தீர்மானம் வெளியான போது, குறிப்பாக கிழக்கில் கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்வுடன் வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

BBC Tamil

Published by

Leave a comment