கொழும்பு: இன்றைய நாட்களில் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் எனச் சொல்லப்படுகின்றவர்கள் எதிரணியின் பக்கம் தாவுவது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் முழு சமூகத்திற்கும் எந்த வித நன்மையை ஏற்படுத்தி விடப் போவதில்லை. மாறாக, முஸ்லிம்களை எதிர்காலத்தில் துரோகிகளாகவும், நாட்டு பற்றற்றவர்களாகவும், வாக்கு மாறுகின்றவர்களாகவும் மாற்று சமூகத்தினர் மென்மேலும் நினைக்கவே இந்த தலைவர்களின் தாவல்கள் வழிகோலும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்தாகும்.
நாட்டின் அரசியல் போக்கை உணராத இவர்கள் சுய லாபங்களுக்காகவும், அரசியல் பேரம் பேசுதல்களுக்காகவும், பதவிகளுக்காகவும் முழு சமூகத்திற்கும் இழுக்கையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த முனைகின்றனர். இது எதிர்காலத்தில் எமக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென்பதை இவர்கள் உணரவில்லை. அரசாங்கத்தின் சுக போகங்களை சொகுசுகளை வேண்டிய மட்டுக்கும் அனுபவித்து விட்டு வங்குரோத்து தனமானா அரசியல் செய்யும் இவர்களுக்கு முஸ்லிம் சமூகம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
உண்மையில், இவர்கள் கட்சி மாறுவதால் நாட்டில் எந்தவித ஆட்சி மாற்றமும் உருவாகப் போவதில்லை. மாறாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மென்மேலும் உறுதிப்படும் என்பதை இவர்கள் ஆழமாகச் சிந்திக்கத் தவறி விட்டனர். நாட்டில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். எதிரணியினர் செய்யும் சூழ்ச்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். மைத்திரி அவர்கள் இந்த நாட்டை ஆள நினைப்பது பகல் கனவு போன்றதாகும். இந்த கனவு நனவாகப் போவதில்லை. இந்த அர்த்தமில்லாத கனவை நனவாக்க மக்கள் ஒரு போதும் அங்கீகாரம் வழங்க மாட்டார்கள்.
பொது வேட்பாளர் மைத்திரி இலங்கையில் முஸ்லிம்களை கருவறுக்க அவரது இனவாத சகாக்களுடன் சேர்ந்து பாரிய திட்டமொன்றை திட்டமொன்றை தீட்டியிருப்பதை நாம் சற்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அண்மையில் சோபித தேரர் அவர்களின் முன்மொழிவில் மைத்திரி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபானத்தின் 87 ஆவது சரத்தின் படி முஸ்லிம்களின் சமய சமூக உரிமைகள் பல மறுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
அந்த வகையில், மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் 87 ஆவது சரத்தின் படி எமது நாட்டில் முஸ்லிம்களின் சமய உரிமைகளான மாடு அறுத்தல், மற்றும் குர்பான் கொடுத்தல் என்பன தடை செய்யப்படுமென அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேவேளையில்இ ஒலிபெருக்கியில் ஐவேளை அதான் சொல்லுதல், வானொலியில் ஐவேளை அதான் ஒலிபரப்பாகுதல் போன்ற முஸ்லிம்களின் இன்னும் பல அடிப்படை உரிமைகளுக்கும் பங்கம் ஏற்படுத்தும் வண்ணம் இனவாத கூட்டுக்களின் அனுசரனையில் மைத்திரிபால சிறிசேன தனது முஸ்லிம்கள் மீதான வஞ்சத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் உணர்ச்சி அரசியலுக்கு ஆட்படாமல் சிந்தித்து செயற்பட வேண்டும். இனத்தின் பெயரால் அரசியல் கட்சிகளை வைத்து, இனவாதத்தை வளர்த்து, மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் செய்பவர்களின் பிழைப்பு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை. ஆதலால், உணர்ச்சி அரசியல் ஒரு போதும் யாருக்கும் உதவாது.
உணர்ச்சி அரசியல் நாட்டில் இன முறுகலையும் கொந்தளிப்பையுமே ஏற்படுத்தவல்லது. நாட்டில் இன்னுமொரு பதட்ட சூழலை எதிர்நோக்கும் நிலையில் முஸ்லிம்கள் இல்லை. கல்வி, பொருளாதார துறைகளில் முஸ்லிம்கள் இன்னும் பல தூரங்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது.
இப்படியானதொரு சூழலில் பல்லின சமூகம் வாழுகிற நாட்டில் உணர்ச்சி அரசியல் பேசி உசுப்பேற்றும் அரசியல்வாதிகளால் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு ஆகமொத்தத்தில் ஆபத்தும், அபகீர்த்தியுமே மிஞ்சும். ஆக, தம் நன்மைக்காக இனத்துவ அரசியல் பேசுகிற கொள்கையற்ற தலைவர்களை நிராகரிக்க வேண்டும். மாற்று சிந்தனையில்லாது உணர்ச்சி அரசியல் செய்து வயிறு கழுவும் அரசியல் வியாபாரிகளின் பின்னால் முஸ்லிம்கள் அணி திரளக் கூடாது.
குறிப்பாக முஸ்லிம்கள், சமூகத்தை படுகுழியில் தள்ள நினைக்கும் சுயநல தலைமைகளின் இந்த சூழ்ச்சிக்கு சோரம் போகக் கூடாது. முஸ்லிம் தலைமைகள் என சொல்லிக் கொள்ளும் இந்த சோரம் போன போலித் தலைமைகள் நாட்டில் முஸ்லிம் சமூகத்தை அரசியலுக்காய் அடகு வைக்கத் துணிந்து விட்டனர். சகோதர சமூகம் எம்மை பழி சொல்லி எம் மீது இனவாதம் எனும் கொடிய விசத்தை பாய்ச்ச இவர்களே வாய்ப்பை ஏற்படுத்தியும் கொடுக்கின்றனர்.
ஆதலால், முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து செயற்படும் காலம் இதுவாகும். இவர்கள் கட்சி தாவிக் கொண்டிருப்பதால் தெற்கிலும் நாடெங்கிலும் மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு அதிகரிக்குமே ஒழிய குறைந்து விடாது. அரசியல் யதார்த்தத்தை முஸ்லிம்கள் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.
நாட்டை காத்த எமது தலைவன் மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது. சிங்கள மக்கள் மஹிந்தவை எந்த சந்தர்ப்பத்திலும் கை விட மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இம் முறையும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே நாட்டின் தலைவராக மக்களின் அமோக ஆதரவால் தெரிவு செய்யப்படுவார். இதுவே இன்றைய யதார்த்தமாகும்.
ஆகவே, இன்று கிராமங்களையும் நகரங்களுடன் இணைத்து சகலருக்கும் சமமான அபிவிருத்திகளையும் நெடுஞ்சாலைகள், கார்ப்பட் வீதிகள் மற்றும் கல்வி, சுகாதார அபிவிருத்திகளை பாரியளவில் மேற்கொண்டுள்ள எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அதிகளவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதுவே ஒவ்வொரு இலங்கை குடி மகனின் தார்மீகமானதும் நன்றியணர்வுமிக்கதுமான கடமையாகம்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் பதவிகளுக்கும், பணத்திற்கும், சோரம் போய் அங்கிருந்து இங்கு இங்கிருந்து அங்கு மந்திகளைப் போல் தாவித் திரியும் அரசியல்வாதிகளை நம்பி கை சேதப்பட்டு விடக் கூடாது. வெற்றி பெறும் கூட்டணியில் முஸ்லிம்கள் பங்காளராய் மாற வேண்டுமே தவிர தோல்வியைத் தழுவப் போகும் நாட்டின் மீது விசுவாசமில்லாத எதிரணி கூட்டணியை ஆதரித்து பகையாளிகளாக மாறி விடக் கூடாது என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
Published by
![Masoor -Moulana[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/12/mashoor-moulana1.jpg?w=122&h=150)
Leave a comment