“நல்லாட்சியை நோக்கிய முன்மாதிரி மிக்க அரசியல் வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”: NFGG செயலாளர் நஜா முஹம்மத்

najaகொழும்பு: நேற்று (25.12.2014) காலையில் தேசிய ஐக்கிய அமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து போதுக்கூட்டமொன்றை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சிக்கும் மாநாட்டுக்குமான மையத்தில் (SLECC) ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க,

கொழும்பு மாநகர சபை மேயர் முசம்மில், மேல் மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயலாளர் நஜா முஹம்மத் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

காலத்தின் தேவை கருதி அங்கு NFGG இன் செயலாளர் நஜா முஹம்மத் ஆற்றிய உரையின் சுருக்க வடிவம் கீழே தரப்படுகிறது.

இன மத வேறுபாடுகளை களைந்து நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஒன்றை நாம் எதிர்நோக்கியுள்ளோம். பொதுவாக இரு கட்சிகளை இரு வேட்பாளர்களை இரு தேர்தல் விஞ்ஞாபனங்களை மைய்யப்படுத்துகின்ற மரபு ரீதியான தேர்தல் கலாசாரத்திலிருந்து விலகி அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியிலிருந்து நாட்டை விடுதலை செய்கின்ற தேர்தல் ஒன்றையே நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

1947 ஆம் ஆண்டில் காலனித்துவவாதிகளிடமிருந்து இந்நாட்டை விடுவிக்க இன மத பேதமின்றி எவ்வித நிபந்தனையுமின்றி ஒரே இலக்குக்காக போராடினார்களோ அதே போன்று ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டை மீட்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

சுமார் 45 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் இயக்கங்களோடு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் தேசிய ஐக்கிய அமைப்பும் , தேசிய ஐக்கிய முன்னணியும் முஸ்லிம்கள் சார்பாக மிகத்தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து நாங்கள் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களோடு ‘100 நாட்களில் இந்நாட்டினை அரசியல் நெருக்கடியிலிருந்தும் ஏகாதிபத்திய அரசியல் அராஜகத்திலிருந்தும் விடுவிக்கின்ற’ ஒரு பொது ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்.

அந்த வகையில் இந்நாட்டின் பிரிக்க முடியாத ஒரு அங்கமான முஸ்லிம் சமூகம், இந்நாட்டிற்கு ஒரு காத்திரமான பங்களிப்பினை செய்ய வேண்டியுள்ளது. தங்களிடமுள்ள 1.4 மில்லியன் வாக்குகளில் 1 மில்லியன் வாக்குகளை எம் பொது வேட்பாளருக்கு வழங்கி அவர் பெரும் வாக்குகளில் 20 % ஐ பெற்றுக்கொடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் அதிக வாக்குகள் மூலம் முழு அமைச்சு அரை அமைச்சுக்களை பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் தடுமாற்றத்தில் இருக்கின்றது. 18ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் அராஜகத்திற்கும் சர்வாதிகார போக்கிற்கும் அவர்கள் வழி சமைத்துக்கொடுத்துள்ளனர். அந்த வரலாற்றுத்துரோகத்திற்கு பாவமன்னிப்புக்கொரும் விதமாக எம்மோடு வந்து இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

18வது திருத்தத்தை முற்றிலும் நீக்கி 17வது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதோடு தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவந்து ஒரு புதிய கலாச்சாரத்தை நோக்கி இந்நாட்டை வழிநடத்துவதற்கான பிரேரணைகள் எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றத்திலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு நல்லாட்சியை நோக்கிய இந்த மாற்றத்தில் இந்த நாட்டின் அனைத்து சமூகங்களும் புத்திஜீவிகளும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மதகுருமார்களும் ஒன்றிணைந்துள்ளோம். இந்நாட்டில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள சந்தர்பவாத வியாபார சுயநல அரசியலிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபடவேண்டும்

நல்லாட்சி விழுமியங்களோடு சுதந்திரமாக சுயாதீனமாக செயற்படக்கூடிய ஒரு அரசியல் மாற்றத்தை நோக்கி கடந்த 8 வருடங்களாக NFGG செயற்பட்டு வருகிறது. எங்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்மாதிரியான அரசியல் முன்னெடுப்புக்களின் தொடராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு மாற்றத்தை நோக்கி முஸ்லிம் சமூகத்தின் வாக்காளர்களை வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் எமது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றோம். தேசிய ஐக்கிய அமைப்பும் அதே நோக்கங்களோடு இணைந்துகொண்டுள்ளது.

எனவே இந்த மாற்று அரசியலை நோக்கிய நல்லாட்சியை நோக்கிய நல்லாட்சி விழுமி யங்களின் அடிப்படையிலான முன்மாதிரி மிக்க ஒரு அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய இவ்வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்

Published by

Leave a comment