“பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தங்களையும் ஒரு சந்திப்புக்கு அழைக்க மாட்டாரா” என ஏங்கும் மக்கள் பிரிவினர்

hizbullah (3)காத்தான்குடி: எதிர்வரும் ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் முகவரும், பொருதாளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இத்தொகுதியில் வாழும் பலதரப்பட்டவர்களையும் ஜனாதிபதியின் தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இத்தொடரில் உலமாக்கள், இளம் உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆட்டோ சாரதிகள், மீனவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்டவர்களையும் உத்தியோகபூர்வமாக இத்தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் முடியுமான வரை வழங்கி வருவதுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் ஒவ்வொரு தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து தனது ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வருவதையும் அடிக்கடி இணையதளங்களில் அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு பலதரப்பட்டவர்களுடனான சந்திப்புக்களையும் ஊடகங்கள் வாயிலாக அவதானித்து வரும் செலிங்கோ முதலீட்டு இலாபப் பங்கு நிதி நிறுவனத்தில் சேமிப்புக்களைச் செய்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அவற்றை மீளப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வைப்பிட்டாளர்கள் பலரும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தங்களையும் இவ்வாறான ஒரு சந்திப்புக்கு அழைத்து தமது பிரச்சினைகளை பற்றிக் கேட்டறிய மாட்டாரா? என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

செலிங்கோ முதலீட்டு இலாபப் பங்கு நிதி நிறுவனம் இஸ்லாமிய வங்கி முறை அடிப்படையில் நிறுவப்பட்டது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சான்றுப்படுத்தியதை அடுத்து இந்நிறுவனத்தில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களும். இஸ்லாமிய பொது நிறுவனங்களும் பல மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்திருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வைப்பீட்டாளர்களின் முதலீட்டுத் தொகைகளை தொழில் சார் பிரமுகர்கள் பலரும் அரசியல்வாதிகளின் பரிந்துகைளின் அடிப்படையில் கடன் பெற்றுக் கொண்டு முறைப்படி அக்கடன் தொகைகளைத் திரும்பச் செலுத்தாத காரணத்தால் அந்நிதி நிறுவனம் திவாலாகி மூடப்பட்டது. இதானால் முதலீட்டாளர்கள் தமது வைப்புத் தொகைகளை மீளப் பெறுவதில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவையெதுவும் இதுவரை பலனளிக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தமது தங்க நகைகளைக்கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் வடக்குத் தமிழ் மக்கள் மீளப் பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில், ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்குமாக ஆதரவளித்து வரும் பல அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சரவை அந்துள்ள அமைச்சர்கள் என 18க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் முஸ்லிம் சமூகத்தினால் நம்பிக்கையுடன் வைப்புச் செய்யப்பட்டு இழக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய் இதுவரை மீளளிக்கப்படவில்லை.

இதனால் வெகுவாக விரக்தியுற்றுள்ள மட்டக்களப்புத் தொகுதியிலுள்ள செலிங்கோ முதலீட்டு இலாபப் பங்கு நிதி நிறுவனத்தின் வைப்பாளர்கள் பலரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் முகவருமான ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் இத்தருணத்தில் இவ்வாறானதொரு சந்திப்புக்கு தங்களையும் அழைத்து தமது நிலைமைகளைக் கேட்டறிய மாட்டாரா? தமது வைப்புத் தொகைகளை மீளப்பெற்றுத் தருவதற்கு ஆவன செய்ய மாட்டாரா? என தமது ஆதங்கத்தை பரவலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

Published by

One response to ““பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தங்களையும் ஒரு சந்திப்புக்கு அழைக்க மாட்டாரா” என ஏங்கும் மக்கள் பிரிவினர்”

  1. Ceylinco is 100% haram. Vattip panam Neruppil poi vittathu. Aenga vendam

Leave a reply to mohmedrislaam Cancel reply