“அமைச்சர் பஷில் மட்டும் நல்லவர்” – கல்முனையில் றிசாட்

rishad in kalmunai (2)– ஹாசிப் யாஸீன்

கல்முனை: மஹிந்த அரசில் இருக்கும் அமைச்சர்களில் மிக நல்ல மனிதர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுத்தீன் நேற்று கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சந்திப்பும், தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தலைமையில் கல்முனை ஆசாத் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்படும் இன விரோத செயற்பாடுகளை விரும்பாத அரசுக்குள் இருக்கும் நல்ல மனிதர் அமைச்சர் பஷிலாகும். அவரின் நட்பை இழந்தமையையிட்டு கவலையடைகின்றேன். அவர் எமது உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராவர்;.

rishad in kalmunai (2)

இருந்த போதிலும் எம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பு, சுய கௌரவம், கலாச்சார விழுமியங்களின் பாதுகாப்பு, எமது பள்ளிவாசல்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும், எமக்கு ஆணை வழங்கிய மக்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் உள்வாங்கி எடுத்த முடிவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாகும்.

எமது கட்சி இவ்வாறான முடிவினை எடுக்கும் என அரசாங்கமோ, மக்களாகிய நீங்களோ நினைத்திருக்கமாட்டீர்கள். ஆனால் நீங்கள் நினைத்ததெல்லாம் முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்ற கட்சியினர் இவ்வாறான முடிவினை எடுப்பார்கள் என நினைத்தீர்கள். அது இன்னும் நடக்கவில்லை. அவர்கள் இதுவரை ஐம்பது கூட்டங்களைக் கூட்டியும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் எமது கட்சி ஒரு கூட்டத்தை மாத்திரமே கூட்டி முடிவெடுத்துள்ளது.

இதுவரையில் பொது எதிரணியில் இணைந்துள்ளவர்களில் எமது கட்சி மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட 70க்கு மேற்பட்ட ஆகக் கூடுதலான உறுப்பினர்களுடன் இணைந்து பெரும்பலத்தினை பொது எதிரணிக்கு கொடுத்துள்ளோம்.

YASHICA Digital Camera

நடைபெறவிருக்கும் இத்தேர்தல் கல்முனைக்கோ, அக்கரைப்பற்றுக்கோ, சம்மாந்துறைக்கோ, காத்தான்குடிக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் தேர்தல் அல்ல. இது எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாக்கும் தேர்தலாகும். இதனை மனதில் நிறுத்தி முஸ்லிம் சமூகம் கட்சி பேதங்களை மறந்து மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Published by

Leave a comment