கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை. பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மகிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
இந்தநிகழ்வில் அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க பங்கேற்காதது, அவர் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அண்மைய நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல்விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி விக்கிரமநாயக்கவை அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், தேடிய போதும், அவர் எங்குமே தென்படவில்லை. இதையடுத்து. அவர், எதிரணியின் பக்கம் சாயலாம் என்ற ஊகங்கள் மேலும் வலுத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர விசுவாசியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Published by

Leave a comment