“மு.கா.வை அரசிலிருந்து வெளியேறுமாறு கோருவோர் சுயநல அரசியல்வாதிகள்”

slmc[1]கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென தலைமைத்துவத்தை வலியுறுத்தும் எம்.பிக்கள், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்கும் சுயநல நோக்கத்தைக் கொண்டவர்களே என கட்சியின் ஒரு சாரார் சுட்டிக்காட்டுகின்றனர். கட்சியையும் சமூகத்தையும் நடுத்தெருவில் விடுவதற்கான இந்தச் சதிவலையில் தலைமைத்துவம் ஒருபோதும் சிக்கிவிடக் கூடாதென அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதாயிருந்தால் எப்போதே வெளியேறியிருக்க வேண்டும், இனி வெளியேறுவது ஆரோக்கியமான விடயமல்ல! எனக் கூறும் இந்த முக்கியஸ்தர்கள் கடந்த கால அரசியல் படிப்பினைகளைச் சீர்தூக்கிப் பார்க்குமாறும் கூறுகின்றனர்.

இப்போது வெளியேற வேண்டு மெனக் கூறுவோரே 18வது திருத்தச் சட்டத்துக்கு மு.கா.வின் முறைப்படியான ஆதரவு கிடைப்பதற்கிடையில் முண்டியடித்துக் கொண்டு பதவிகளுக்காக சோரம் போக எத்தனித்தவர்கள். இந்த அரசாங்கத்துடன் இவர்கள் ஒட்டியிருந்த எந்தக் காலத்திலும் அதனுடனான நல்லுறவை வளர்த்தவர்களுமல்லர். அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே தேவையற்ற விமர்சனங்களைப் புரிவதையே தொழிலாகக் கொண்டவர்களென மு.கா. புத்திஜீவிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2005, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி வேட்பாளர்களை ஆதரித்திருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மு.காவை அரவணைத்து பதவி வழங்கியதை இவர்கள் இலகுவில் மறந்துவிட முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்ப வாத அரசியலை மேற்கொள்வதாக பிறர் வசைபாடுவதற்கு மு.கா. தலைமை ஒருபோதும் வழிவகுக்கக்கூடாது.

பெருந்தலைவர் மர்ஹ¥ம் அஷ்ரஃப் அரும் பாடுபட்டு வளர்த்தெடுத்த கட்சியின் கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பு காப்பாற்றப்பட வேண்டும் அரசியலில் என்னதான் நடந் தாலும் முஸ்லிம்களின் சமூகக் கட்சியென்ற வகையில் அவற்றைப் பேண வேண்டிய தார்மீகப் பொறுப்பு கட்சிக்குள்ளதென்ற உண்மை இவ்வாறான இக்கட்டான நேரத்திலேயே உணர்த்தப்பட வேண்டும்.

மர்ஹ¥ம் அஷ்ரஃப் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் முரண்பட்ட வேளையிலெல்லாம் அவர் மட்டுமே அது தொடர்பில் வாய் திறந்தார். ஆனால் இன்றோ தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலை கட்சிக்குள் உருவாகியுள்ளது. இதற்கு எவரும் இடமளிக்க அனுமதிக்க முடியாதெனவும் அவர்கள் உருக்கமாக தெரிவிக்கின்றனர்.

எனவே அழுத்தங்களுக்குப் பயந்து முடிவெடுக்காமல் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு என்ற அறிவிப்பை இன்னும் சில தினங்களிலாவது விடுக்குமாறு கட்சியின் தலைமையை முஸ்லிம் காங்கிரஸின் நலனில் அக்கறை கொண்ட ஒரு சாரார் வேண்டி நிற்கின்றனர்.

Published by

Leave a comment