கொழும்பு: ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ தபால் மூல வாக்களிப்பு நாளையும் (23) நாளை மறுதினமும் (24) நடாத்தப்படவுள்ளன. அஞ்சல்மூல வாக்காளர்கள் தமது வாக்குகளை சுதந்திரமாகவும் இரகசியமாகவும் அடையாளமிடுவதற்கான ஏற்பாடு மேற் கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய, வாக்காளர்களை அடையாளமிட்டுள்ள சின்னம் பிறர் அறியாத வகையில் பாதுகாக்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார்.
அஞ்சல் வாக்கு அடையாளமிடும் இடமொன்றில் வாக்களிப்பதற்கான தடை அல்லது அச்சுறுத்தலை எவரேனும் ஏற்படுத்தினாலோ அல்லது அதற்காக முயற்சித்தாலோ அந்த வாக்கெடுப்பு வறிதாக்கப்படும் அதேவேளை, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வன்முறைகளில் ஈடுபடுவோர்க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் மூல வாக்களிப்பு இடம் பெறும் அரசாங்க அலுவலகங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ம் திகதி அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும்.
எனினும் அன்றைய நாள் சுனாமியை நினைவுகூரும் தினமாகையால், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (23) அல்லது நாளை மறுதினம் (24) வாக்களிக்க முடியுமெனவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மெஹமட் கூறினார்.
தேர்தல் திணைக்கள அலுவலர்களுக்கு டிசம்பர் 30ம் திகதி அஞ்சல் மூல வாக்களிப்பு நடத்தப்படும். மேலும் 23 அல்லது 24 ம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்கள் தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் தமது அஞ்சல் மூல வாக்கினை செலுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
Published by
![vote_1630727c[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/vote_1630727c1.jpg?w=150&h=94)
Leave a comment