அமைச்சர் ரிசாத்தின் கோரிக்கைகள் ஜனாதிபதியினால் முழுமையாக ஏற்பு

rishadகொழும்பு: முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவதற்கும் ஏனைய கோரிக்கைகளை அரசுடனான உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அகதிகளாக இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்கல், சகல சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் சமய, கலாசார உரிமைகளைப் பேணுவதற்கான உத்தரவாதம், வடக்குக் கிழக்கில் படையினராலோ, புலிகளினாலோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கை, அரசாங்க தொழில் வாய்ப்பு மற்றும் அரச உயர் பதவிகளில் நியமனம் ஆகியவற்றில் இன விகிதாசாரம் பேணப்படல், மட்டக்களப்பு – பொத்துவில் புகையிரதப் பாதை விஸ்தரிக்கப்படல் ஆகிய பிரதான கோரிக்கைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரச உயர்மட்ட அமைச் சர்களுக்குமிடையில் கடந்த வாரம் இடம் பெற்ற சந்திப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கோரிக்கைகள் விரிவாக ஆராயப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக அ. இ. ம. கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி யாக கட்சியின் கோரிக்கைகளுடன், சம்பந் தப்பட்டுள்ள அமைச்சர்களுடனும் பாதுகாப்புச் செயலாளருடனும் இடம்பெற்ற பல்வேறு கட்டச் சந்திப்புகளின் போது உடன்பாடு கண்ட விடயங்களை இரு தரப்பு ஒப்பந்தத் திலும் உள்வாங்குவதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுப்பதற்குமான தீர்மா னங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இதேவேளை கிராண்ட் பாஸில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளியைத் திறப்பதற்கும் தம்புள்ளையில் பள்ளி கட்டுவதற்கென காணியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நட வடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ, அமைச்சர் ரிசாட் பதியுதீனுடனான சந்திப்பின்போது உறுதியளித்தார்.

கோரளைப் பற்றுவில் புதிய பிரதேச சபையொன்றை உருவாக்கல், கல்குடா மற்றும் முசலியில் குடிநீர் விநியோகத் திட்டம், மன்னார் முசலி பிரதேசத்தை நகர வடிவமைப்புத் திட்டத்தின் மூலம் உள்வாங்கி புதிய நகரமாக வரைபுபடுத்தி அதனை அபிவிருத்தி செய்தல். போன்ற கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக அரச உயர்மட்டம் தங்கள் கட்சிக்கு உறுதியளித்துள்ளதாக அந்த முக்கியஸ்தர் மேலும் குறிப்பிட்டார்.

இதுதவிர அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு முக்கிய கோரிக்கையான கல்வி தொடர்பிலான பிரச்சினைகளை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சு அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு அங்கீகாரம் அளித்துள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்டி, தெஹிவளை, கொலன்னாவை ஆகிய இடங்களில் முஸ்லிம் பாடசாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தெஹிவளை மீலாத் வித்தி யாலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு போதிய இடவசதி இன்மையால் அப் பாடசாலைக்குப் பதிலாக வெள்ளவத்தை ஆர்துசா வித்தியாலயத்தை அபிவிருத்தி செய்தல். அத்துடன் கண்டி பிரதேசத்தில் முஸ்லிம் பாடசாலை ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சர் ரிசாத் எடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

மற்றும் மன்னாரில் மடு பிரதேசத்தில் சிங்களப் பிள்ளைகளுக்கும் தாராபுரம் டர்சி சிட்டி ஆகிய பகுதியை உள்ளடக்கி பாடசாலைகளையும் ஆரம்பித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தவிர மெளலவி ஆசிரியர் நியமனத்தில் நேர்முகப் பரீட்சைக்கு சென்று இன்னும் நியமனம் வழங்கப்படாத சுமார் 200 பேருக்கு நியமனம் வழங்கவும் புதிதாக மெளலவி ஆசிரிய போட்டிப் பரீட்சை நடத்தி இன்னும் பலரை உள்வாங்குவதற்கும் கல்வி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.

Published by

Leave a comment