காத்தான்குடி: இன்று பி.ப. காத்தான்குடிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது வலக்கை முஸ்லிம் அமைச்சர்களும் மற்றும் பிர அரசியல் பிரமுகர்களும் வருகை தரவிருக்கின்றனர். அதி உத்தம இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள், தேர்தல் காலங்களில் எங்கள் ஊருக்கு வருவதை நாங்கள் ஒரு போதும் எதிர்க்கவில்லை. காத்தான்குடி மக்கள் சார்பாக உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்தினியல் ஊடகங்களின் சமகால இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைமையை கவனிக்கும்போது, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் அதிகமானவர்களைத் தவிர, இலங்கையின் வேறு எந்த முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்தவையும் அவரது கட்சியையும் ஆதரிக்கவில்லை என்பதும், குறிப்பாக காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் கல்முனை பிரதேச முஸ்லிம்கள் இன்னும் மஹிந்தவின் அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருப்பதை பல கோணங்களில் விமர்சித்து வருகின்றதுடன் நின்று விடாமல், இப்பிரதேசங்களில் மஹிந்தவிடம் பெற்றுக்கொண்ட கோடான கோடி ரூபாய்களுக்காக முஸ்லிம்களை மீண்டும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல் வாதிகள் மஹிந்தவை ஜனாதிபதியாக்க இப்பிரதேச மக்களை என்ன விலைகொடுத்தும் வாங்குவதற்கு முன்வரும் விடயங்களையும் ஆதாரத்துடன் தெட்டத்தெளிவாக எடுத்தும் வைக்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்கள் எப்போதுமில்லாத அளவுக்கு மஹிந்தவின் குடும்ப கூட்டரசாங்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ்வின் கேலி உருவம் அமைக்கப்பட்டு ஊர்வலம் எடுக்கப்பட்டது. பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டன. ஹலால் அகற்றப்பட்டது. மியன்மார் கசாப்புக்கடைக்காரனை அழைத்து இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு தாங்கள் யார் என்பதை தெட்டத்தெளிவாக்க பொதுபல சேனாவுக்கு வழிதிறந்தமை. ஓர் மந்திரிசபை போன்று பொதுபல சேனா இந்நாட்டில் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டமை, அழுத்கமையை எரித்து முஸ்லிம் இளைஞர்களைக் கொன்று, எமது சகோதரிகளை விதவையாக்கிய வரலாறும் இவ்வரசாங்கத்திலேயே ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்பார்ப்பது இந்தக் குடும்ப ஆட்சி அழியட்டும் என்பதே. அழுத்கம எரியும்போது எமது தாய்மார்களினதும், சகோதரர்களினதும் துஆக்கள் அல்லாஹ்வால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.
கடந்த மாதம் வரை ஜனாதிபதி மஹிந்தவை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாதிருந்த இலங்கை அரசியலில் ஓர் திடீர் மாற்றம் எப்படி மாறியது என்பது சாதாரண விடயமல்ல. இது அல்லாஹ் ஏற்படுத்திய ஓர் அற்புதமான சந்தர்ப்பம்.பிரதேச அரசியல்வாதிகள் அவர்களது வியாபாரத்தை கவனமாக மேற்கொள்கின்றனர். மக்களைப் பொறிக்குள் சிக்கவைத்து, அரசியல்வாதிகள் அரன்மணைகளில் சுகபோகம் காண இன்னும் இன்னும் ஆசைப்படுகிறார்கள்.
மஹிந்தவின் வருகை:
காத்தான்குடி மக்களின் வார விடுமுறையான வெள்ளிக்கிழமையான இன்று இத்தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுகிறது. மக்களை ஒன்றுதிரட்ட அருமையான சந்தர்ப்பத்தை பிரதேச அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
மஹிந்தவின் தருணம்:
கிழக்கு தவிர்ந்த, முஸ்லிம் பிரதேசங்களில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரம் எதுவும் சோபிக்காது. இதனாலேயே காத்தான்குடியை தேர்வு செய்து, கிழக்கில் தனக்குரிய முஸ்லிம்களின் ஆதரவு எவ்வாறு என்பதை ஏனைய இலங்கை முஸ்லிம்களுக்கு எடுத்துக்காட்ட இச்சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அருமையான தருணமாக அமைகிறது.
மஹிந்தவின் உரை:
ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த உரையைவிட, உள்ளுர் அரசியல்வாதிகள் சொல்லிக்கொடுத்த வார்த்தைகள்தான் மஹிந்தவின் உரைகளில் ‘கிளைமக்ஸ்’ ஆக அமையும். அவற்றுள், ஸலாம், அல்குர்ஆன், ஹதீஸ் மற்றும் முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்பு ‘ஹைலைட்’டாக அமையும்.
பொதுமக்கள்:
மஹிந்தவின் உரை மேற்கூறப்பட்ட கருப்பொருளிலேயே அமையும். எனவே, பொதுமக்கள் அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு, அல்லாஹூ அக்பர் என்று கூறி, பொய்களுக்கு வலுவூட்டவோ, கூக்குரலிட்டு குழப்பவோ வேண்டாம். அமைதியாக இருந்து ஓர் மேடை நாடகத்தை பார்த்து இரசித்த நினைப்பில் கலைந்து செல்லவும்.
உலமாக்கள்:
மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்தை காண்பதற்காக ஜூம்ஆவை சுருக்கமாக முடித்துவிட்டு, அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு, அனைவரும் முன்வரிசையில் உட்கார்ந்து, பிரச்சார மேடையை அலங்கரிக்க உலமாக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் மஹிந்தவின் கையை முத்தமிட்டு, பலவிமர்சனங்களுக்கு உள்ளான உலமாக்கள், பல கோணங்களிலும், சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டனர். இத்தவரை மீண்டும் இவர்கள் செய்யமாட்டார்கள் என நம்பலாம் (?)
தீவிர விசுவாசிகள்:
மோட்டார் சைக்கிள் மற்றும் 2,500 ரூபாய் காசு பெற்றவர்கள் மற்றும் இவற்றை எதிர்காலத்தில் பெற இருப்பவர்கள் முன்வரிசையில் அமர்த்தப்பட்டு, மேடையிலிருந்து உதிரும் வார்த்தைக்கு வார்த்தைகளுக்கு பதிலாக இவர்களின் கைதட்டுதல்கள் வானைப் பிளக்கும்.
பிளஸ்பெக்:
1988 இல் தேர்தல் பிரச்சாரத்திற்கு காத்தான்குடிக்கு வருகை தந்திருந்த மறைந்த சிறிமாவோ பண்டார நாயக்காவை, இதே மைதானத்தில் வைத்து, அவரை ஓர் பெண் என்றும் பார்க்காமல் செருப்புக்களாலும், கற்கலாலும் எரிந்து, கேவலப்படுத்தி துறத்தியனுப்பப்பட்ட காத்தான்குடி மக்கள், அதே குற்றத்தை இப்போது செய்யமாட்டார்கள்.
காலநிலை:
கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் அடைமழை குறித்த தேர்தல் பிரச்சாரத்தை தடங்களாக்கலாம். ஆனாலும், குறப்பிட்ட மக்கள் அமரக்கூடிய அளவுக்கு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கைத் தவிர சாதாரண மழைக்கு இந்நிகழ்வு தடைப்படாது என நம்பலாம் (இன்ஷாஅல்லாஹ்)
எனது அவதானம்:
குறிப்பா கடந்த 2 வருடங்கள் இவர்களின் ஆட்சியில் இலங்கை முஸ்லிம்கள் அனுபவித்த இவ்வாறான ஒரு துயரத்தை முன்னெப்போதும் சந்திக்கவில்லை. இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் இத்துயரங்களை மறைக்க முற்பட்ட வேளைகளிலெல்லாம் வெளிநாட்டு ஆங்கில மற்றும் அரபு ஊடகங்கள் ஆதாரங்களுடன் இவ்வரசாங்கத்தின் இத்தகைய முஸ்லிம்கள் மீதான துயரங்களை எழுத்தில் வடித்து, படங்களுடன் பிரசுரித்து இலங்கை முஸ்லிம்களின் துயரங்களை உலகுக்கு பறைசாட்டின.
எனவே, மஹ்ந்தவின் தேர்தல் பிரச்சாரம் காத்தான்குடியில் நடக்கட்டும். அவருக்குரிய மரியாதையை நாங்கள் வழங்குவோம். இழந்ததை மறக்கமாட்டோம் தேர்தலில் இன்ஷா அல்லாஹ்!!!
Published by






![motor_bike_002[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/10/motor_bike_0021.jpg?w=300&h=179)


Leave a reply to Cassim Cancel reply